பேசாம ஜூஸே வித்து இருக்கலாம்.. கோடி கணக்குல பணம் அடிச்ச மகாதேவ் ஆப்.. பட்டை அடிச்சி விட்ட ஒன்றிய அரசு!
அமலாக்க இயக்குனரகத்தின் (Enforcement Directorate - ED) விசாரணையை தொடர்ந்து மத்திய அரசானது, மகாதேவ் புக் ஆன்லைன் (Mahadev App) உட்பட 22 சட்டவிரோத பெட்டிங் ஆப்கள் மற்றும் வெப்சைட்களுக்கு (Betting Apps and Websites) எதிரான தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
"மஹாதேவ் புக் மற்றும் ரெட்டியன்னாபிரெஸ்டோப்ரோ (Reddyannaprestopro) உட்பட 22 சட்டவிரோத பந்தய செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு எதிராக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology - MeitY) தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது" என்று மத்திய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மகாதேவ் புக் ஆப் என்றால் என்ன? அறியாதோர்களுக்கு, மகாதேவ் புக் என்பது ஒரு ஆன்லைன் பெட்டிங் பிளாட்ஃபார்ம் (Online Betting Platform) ஆகும். இது போக்கர் (Poker), கார்டு கேம்ஸ் (Card Gams), பேட்மிண்டன் (Badminton), டென்னிஸ் (Tennis), கால்பந்து (Football) மற்றும் கிரிக்கெட் (Cricket) போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சட்டவிரோத சூதாட்டத்தை (Illegal Gambling) செயல்படுத்துகிறது.
யார் இந்த ஆப்பின் சொந்தக்காரர்? மகாதேவ் புக் ஆப்பின் சொந்தக்காரர் சௌரப் சந்திரகர் (Saurabh Chandrakar) ஆவார். சத்தீஸ்கரை சேர்ந்த இவர் ஒரு முன்னாள் ஜூஸ் விற்பனையாளரான ஆவார். இவரும் அவரது கூட்டாளியான ரவி உப்பல் (Ravi Uppal) ஆகிய இருவருமே மாகாதேவ் புக் ஆப்பை இயக்கி வந்துள்ளனர்.

இவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டம் பாய்ந்ததா? ஆம். ஆன்லைன் சூதாட்ட குற்றசாட்டை தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) பிரிவு 19 இன் கீழ் கைது செய்யப்பட்ட மகாதேவ் புக் ஆப்பின் உரிமையாளர்கள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்னனர். பிஎம்எல்ஏ 2002 இன் பிரிவு 4-ன் கீழ் தண்டனைக்குரிய பிரிவு 3-ன் கீழ், பணமோசடி செய்த குற்றத்தின்கீழ் இவர்கள் சிறைக்குள் சென்றுள்ளனர்.
"அமலாக்க இயக்குநரகம் நடத்திய விசாரணைகள் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள மகாதேவ் புக்கில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகள், மற்றும் இந்த செயலியின் சட்டவிரோத செயல்பாடுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்தே மகாதேவ் ஆப் மீதான இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கண்டுகொள்ளாத சத்தீஸ்கர் அரசங்கம்? மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (Union Minister Rajeev Chandrasekhar) வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் அரசு இந்த சட்டவிரோத செயலி மற்றும் இணையதளத்தை நீண்ட காலத்திற்கு முன்பே முடக்கியிருக்கலாம், ஏனெனில் அதற்கான அனைத்து அதிகாரமும் அதற்கு உள்ளது.
"பிரிவு 69ஏ ஐடி (தகவல் தொழில்நுட்பம்) சட்டத்தின் (Section 69A IT (Information Technology) Act) கீழ் இணையதளம் / ஆப்பை மூடுவதற்கு பரிந்துரைக்கும் அனைத்து அதிகாரமும் சத்தீஸ்கர் அரசாங்கத்திற்கு (Chhattisgarh government) உள்ளது. இருப்பினும் சத்தீஸ்கர் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை".
..மேலும் மத்திய அரசு இதைப்பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது, மாநில அரசால் அத்தகைய கோரிக்கை எதுவும் விடுக்கப்படவும் இல்லை. கடந்த 1.5 ஆண்டுகளாக இது அமலாக்க இயக்குனரகத்தால் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. சத்தீஸ்கர் அரசாங்கம் எந்தவிதமான தடுப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை"" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு சந்திரசேகர் கூறியுள்ளார்.
அமலாக்க இயக்குனரகத்தின்படி, பினாமி வங்கி கணக்குகளின் (Benami Bank Account) சிக்கலான நெட்வொர்க் மூலம் கருப்பு பணத்தை "சுத்தப்படுத்தும்" தளத்தை பயன்படுத்தி இந்த மகாதேவ் ஆப் இயக்கப்படுகிறது. இப்படியான நடவடிக்கை மூலம் தினமும் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சூதாட்ட தளங்களுக்கு எதிராக மத்திய அரசாங்கம் தடை விதிப்பது, இதுவொன்றும் முதல் முறையல்ல. "முறையற்ற தரவு சேமிப்பு மற்றும் பரிமாற்றம்" மற்றும் பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த மார்ச் மாதம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது 138 பெட்டிங் மற்றும் சூதாட்ட ஆப்களின் செயல்பாடுகளை "அவசர" அடிப்படையில் தடை செய்தது. இதுபோன்ற தடைகள் அவ்வப்போது நடந்தாலும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது என்பதே எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications