Indane-HP எச்சரிக்கை.. சிலிண்டர் டெலிவரி பெயரில் இப்படி கூட மோசடி நடக்குமா? கவனமாக இருங்க!
தற்போது சில மோசடி கும்பல் LPG DAC கோட் மோசடி என்ற புதிய வழியில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். எனவே Indane மற்றும் HP Gas போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இந்தியா முழுவதும் சிலிண்டர் விநியோகம் 100 சதவீதம் DAC (டெலிவரி அங்கீகாரக் குறியீடு) மூலமாகவே செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த விதி உங்களது பாதுகாப்பிற்காகவும், வேறு யாராவது உங்கள் சிலிண்டரை பெறுவதைத் தடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது மோசடிக்காரர்கள் இதை ஒரு ஆயுதமாக மாற்றிவிட்டனர்.

அதாவது வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றில் போலி மெசேஜ் ஒன்று அனுப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அதுவும் மோசடிக்காரர்கள் உங்களது சிலிண்டர் ரத்து செய்யப்படும் அல்லது உங்கள் மானியம் நிறுத்தப்படும் எனவும், இந்த இணைப்பில் DAC/OTP-ஐ உள்ளிடவும் என மிரட்டல் செய்திகளை உங்களுக்கு அனுப்பக்கூடும். ஒருவேளை அந்த ஓடிபி-ஐ நீங்கள் தெரிவித்தால் உங்களது போனில் உள்ள முக்கிய விவரங்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும். ஆனால் இதை இதைத் தவிர்ப்பதற்காக, நிறுவனங்கள் சில விஷயங்களை அறிவுறுத்துகின்றன. அது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
உண்மையான செய்திகளை எவ்வாறு கண்டறிவது?
HP Gas வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் அதிகாரப்பூர்வ செய்திகள் எப்போதும் "VM-HPGASc-S" போன்ற அனுப்புநர் பெயருடன் வரும். குறிப்பாக அவற்றில் 4-இலக்க ஓடிபி அடங்கியிருக்கும். அதேபோல் HP ஊழியர்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப்பில் OTP-களைக் கேட்பதில்லை.
குறிப்பாக இன்டேன் செய்தியானது 'VK-INDANE' அல்லது 'VM-INDANE' போன்ற ஒரு ஐடியுடன் வருகிறது. அதில் 6 இலக்க DAC குறியீடு அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விநியோகஸ்தரிடம் மட்டுமே சொல்ல வேண்டும்
உங்களுக்கு வரும் 4-இல்ல ஓடிபி-ஆக இருந்தாலும் சரி அல்லது 6-இலக்க DAC குறியீடாக இருந்தாலும் சரி, சிலிண்டருடன் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் விநியோகஸ்தரிடம் மட்டுமே அதைச் சொல்ல வேண்டும். அதற்கு முன்பு இந்த எண்ணை ஒருபோதும் போனில் யாரிடமும் பகிர வேண்டாம்.
ஒருவேளை நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யாமலும், டெலிவரி அல்லது குறியீடு குறித்த செய்தி வந்தால் அதை உடனே நீக்கிவிடவும். யாரவது போனில் இப்போதே குறியீட்டைச் சொல்லுங்கள் இல்லையெனில் முன்பதிவு ரத்து செய்யப்படும் என்று கூறினால் அவர் ஒரு மோசடிக்காரர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மேலும் முன்பின் தெரியாத எந்தவொரு இணைப்பு மூலமாகவும் உங்கள் முன்பதிவு விவரங்களைப் பகிர வேண்டாம்.

புதிய விதிமுறைகள்
சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, இனி உங்களது வீட்டில் சமையலுக்காகக் குழாய் வழி எரிவாயு (PNG) மற்றும் எல்பிஜி சிலிண்டர் (LPG) இணைப்பையும் ஒரு முகவரியில் ஒன்றாக வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுவும் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வைத்திருப்பவர்களை தங்கள் LPG சிலிண்டர்களைத் திருப்பியளிக்கக் கட்டாயப்படுத்துவது மற்றும் எரிவாயு சிலிண்டர்களை பதுக்குவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு சிலிண்டர் முன்பதிவிற்கும் இடையே கட்டாயமாக நகரப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் காத்திருப்பு காலத்தை நிர்ணயிப்பது ஆகியவை இந்த புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications