புது Gas சிலிண்டர் ரூல்ஸ்.. செப்டம்பர் 1 முதல் அமல்.. என்னென்ன மாறுது? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
செப்டம்பர் 1 முதல் எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பல முக்கிய விதிகள் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக உங்களது வீட்டில் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த புதிய விதிகளைப் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. அதுவும் அரசாங்கம் செயல்படுத்தவுள்ள இந்த மாற்றங்கள் உங்கள் பணப்பையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
e-KYC அப்டேட்
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான e-KYC சரிபார்ப்பை முடிக்க இன்று (ஆகஸ்ட் 31) மட்டுமே அவகாசம் உள்ளது குறிப்பாக IOCL, BPCL, HPCL ஆகிய நிறுவனங்கள் இந்த காலக்கெடுவை ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன. ஆகஸ்ட் 31க்குள் e-KYC செய்யாவிட்டால், செப்டம்பர் 1 முதல் அதிக விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம் அல்லது சிலிண்டர்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆன்லைனில் e-KYC செய்ய விரும்புபவர்கள், தாங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனமான IOCL, BPCL அல்லது HPCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும். அங்கு e-KYC அல்லது Aadhaar KYC என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் OTP உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.
ஒருவேளை ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று e-KYC சரிபார்ப்பை முடிக்கலாம். அங்கு பயோமெட்ரிக் (கைரேகை) சரிபார்ப்பு அல்லது தேவையான ஆவணங்களை வழங்கி இந்த செயல்முறையை நிறைவு செய்யலாம். கேஸ் ஏஜென்சிக்கு செல்லும்போது, கேஸ் இணைப்பு புத்தகம் (அல்லது நுகர்வோர் எண்) மற்றும் ஆதார் அட்டை போன்ற தேவையான ஆவணங்களைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் e-KYC செயல்முறை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.
சிலிண்டர் விலை
நாட்டில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலேயே செய்யப்படுகின்றன. ஆகவே வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே சிலிண்டர் விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் சமையலறை பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 1-ம் தேதி 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிணடரின் விலை ரூ.202 குறைக்கப்பட்டது. அதேசமயம் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PNG இணைப்புகளை அதிகரிக்கத் திட்டம்
வரும் செப்டம்பர் 1, 2026 முதல் வீட்டு உபயோகக் குழாய்வழி எரிவாயு (PNG) தொடர்பான புதிய திட்டம் அமலுக்கு வருகிறது. வீடுகளுக்கு PNG இணைப்புகளை அதிகரிக்க மத்திய அரசு ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 1.74 கோடி வீட்டு PNG இணைப்புகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய பகுதிகளுக்கும் PNG குழாய்வழி எரிவாயு வசதி விரிவுபடுத்தப்படும். மேலும், தற்போது பயன்படுத்தப்படாமல் அல்லது கட்டணம் செலுத்தப்படாமல் உள்ள இணைப்புகளையும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கிறது.
சிலிண்டர் முன்பதிவு
எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான கால இடைவெளி வளைகுடாப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான முன்பதிவுகளுக்கு இடையே குறிப்பிட்ட கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகர்புற வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த முன்பதிவுகளுக்கு இடையே 25 நாட்கள் இடைவெளியையும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் 45 நாட்கள் இடைவெளியையும் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications