கேஸ் சிலிண்டர் e-KYC-க்கு டென்ஷன் வேண்டாம்.. காலக்கெடு நீட்டிப்பு.. இதோ புதிய தேதி!
சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சமையல் மற்றும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக வணிக சிலிண்டர்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், சிலிண்டர் முன்பதிவு நடைமுறையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான இடைவெளி காலம் அதிகரிக்கப்பட்டது. அதன்படி நகர்ப்புற மக்கள் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புற மக்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இதுதவிர கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனையைத் தடுக்க, வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கட்டாயம் இ-கேஒய்சி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் இ-கேஒசி பதிவு செய்தனர். ஆனால் இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இ-கேஒய்சி செய்யும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. ஆகவே எல்பிஜி சிலிண்டரை வாங்கும் இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் அனைவரும், ஆதார் கார்டு அடிப்படையிலான இ-கேஒய்சி-யை வருகின்ற ஆகஸ்ட் 23-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்த நபர்களின் பெயரில் தொடரும் கேஸ் இணைப்புகள் மற்றும் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள போலி அல்லது தேவையற்ற கூடுதல் இணைப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், கேஸ் விநியோக நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் விரைவில் e-KYC-ஐ முடிக்குமாறு எஸ்எம்எஸ் மூலம் தொடர்ந்து நினைவூட்டல் அனுப்பி வருகின்றன.
அதேபோல் அரசு சார்பில் மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சரிபார்ப்பை முடிக்க ஆகஸ்ட் 23 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் e-KYC-ஐ முடிக்காத நுகர்வோருக்கு கேஸ் சிலிண்டர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். சிலருக்கு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக எல்பிஜி கேஸ் சிலிண்டரை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பெற விரும்பினால், ஆதார் e-KYC சரிபார்ப்பை விரைவில் முடித்துவிடுவது நல்லது. இதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் எளிதாக செய்து முடிக்கலாம்.

ஆன்லைனில் e-KYC செய்ய நினைத்தால், நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனமான IOCL, BPCL அல்லது HPCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும். அங்கு e-KYC அல்லது Aadhaar KYC என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் OTP உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.
ஒருவேளை நீங்கள் கேஸ் ஏஜென்சிக்கு போக நினைத்தால் கேஸ் இணைப்பு புத்தகம் (அல்லது நுகர்வோர் எண்) மற்றும் ஆதார் அட்டை போன்ற தேவையான ஆவணங்களைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் e-KYC செயல்முறை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.


Click it and Unblock the Notifications