LPG கேஸ் சிலிண்டர்.. வாடிக்கையாளர்களே அலெர்ட்.. இன்னும் 2 நாட்கள் மட்டுமே.. உடனே இந்த வேலையை முடிங்க!
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விநியோகம், மானியம் உள்ளிட்ட சேவைகள் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து கிடைக்க, அனைத்து வாடிக்கையாளர்களும் ஆதார் மூலம் இ-கேஓய்சி சரிபார்ப்பை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் அன்றாட சமையலுக்கான முக்கிய எரிபொருளாக எல்பிஜி கேஸ் சிலிண்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் மூலம், எல்பிஜி இணைப்புகள் நாட்டின் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் உள்ள குடும்பங்களுக்குச் சென்றடைந்து.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு ஈரான் போர் காரணமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அரசு சில புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. அதாவது எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும் தங்கள் ஆதார் எண்ணை கேஸ் இணைப்புடன் இணைக்கும் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை விரைவாக முடிக்க வேண்டும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி செயல்முறையை ஆகஸ்ட் 16-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறந்த நபர்களின் பெயரில் தொடரும் கேஸ் இணைப்புகள் மற்றும் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள போலி அல்லது தேவையற்ற கூடுதல் இணைப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், கேஸ் விநியோக நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் விரைவில் e-KYC-ஐ முடிக்குமாறு எஸ்எம்எஸ் மூலம் தொடர்ந்து நினைவூட்டல் அனுப்பி வருகின்றன.
அதேபோல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தை வெளிப்படையாக நடத்தவும், போலி இணைப்புகளை நீக்கவும் ஆதார் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சரிபார்ப்பை முடிக்க ஆகஸ்ட் 16 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் e-KYC-ஐ முடிக்காத நுகர்வோருக்கு கேஸ் சிலிண்டர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். சிலருக்கு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எல்பிஜி கேஸ் சிலிண்டரை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பெற விரும்பினால், ஆதார் e-KYC சரிபார்ப்பை விரைவில் முடித்துவிடுவது நல்லது. இதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் எளிதாக செய்து முடிக்கலாம்.
ஆன்லைனில் e-KYC செய்ய விரும்புபவர்கள், தாங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனமான IOCL, BPCL அல்லது HPCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும். அங்கு e-KYC அல்லது Aadhaar KYC என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் OTP உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.
ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று e-KYC சரிபார்ப்பை முடிக்கலாம். அங்கு பயோமெட்ரிக் (கைரேகை) சரிபார்ப்பு அல்லது தேவையான ஆவணங்களை வழங்கி இந்த செயல்முறையை நிறைவு செய்யலாம்.

கேஸ் ஏஜென்சிக்கு செல்லும்போது, கேஸ் இணைப்பு புத்தகம் (அல்லது நுகர்வோர் எண்) மற்றும் ஆதார் அட்டை போன்ற தேவையான ஆவணங்களைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் e-KYC செயல்முறை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.
கேஸ் ஏஜென்சியில் e-KYC சரிபார்ப்பை மேற்கொள்ள எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது முற்றிலும் இலவச சேவையாகும். ஆகஸ்ட் 16 வரை கால அவகாசம் இருப்பதால் தாமதிக்காமல், முடிந்தவரை விரைவில் e-KYC-ஐ நிறைவு செய்வது இறுதி நேர சிரமங்களையும் சிலிண்டர் பெறுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications