பெர்சனல் லோன், ஹோம் லோன் வாங்கி உள்ளவர்களுக்கு RBI திடீர் எச்சரிக்கை.. பணம் பறிபோனா நாங்க பொறுப்பில்ல!
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது, வங்கிகளில் கடன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது கடன் தள்ளுபடி சலுகை (Loan waiver offer) குறித்த ஒரு எச்சரிக்கை ஆகும்.
வங்கிகளில் கடன் வாங்கி உள்ளவர்களை திட்டமிட்டு குறிவைக்கும் மோசடியான கடன் தள்ளுபடி திட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் பொதுவாக சமூக ஊடகங்கள் மற்றும் முறைசாரா வழிகள் மூலம் பரவி, குடிமக்களுக்கு கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, பல அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத நிறுவனங்கள், கட்டணத்திற்காக கடன் தள்ளுபடிகளை ஏற்பாடு செய்ய முடியும் அல்லது 'கடன் தள்ளுபடி சான்றிதழ்களை' வழங்க முடியும் என்று வெளிப்படையாக கூறுகின்றன. இந்த கூற்றுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இத்தகைய கூற்றுகளுக்கு நாட்டின் முறையான வங்கி சூழலிலும் அடிப்படை இல்லை. இதுபோன்ற கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் நிராகரிக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தால், கடுமையான மற்றும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அவற்றுக்கு அங்கீகாரம் வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.
மக்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர்? மோசடிக்காரர்கள், அவசரமாக நிதி தேவைப்படும் நிதி நெருக்கடியில் உள்ள குடிமக்களை குறிவைக்கின்றனர். சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், கடனை திருப்பி செலுத்தும் கடமைகளை எளிதாக நீக்கிவிடலாம் என்று அவர்கள் நம்ப வைக்கின்றனர். இதை நம்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் சேவை கட்டணங்கள் என்கிற பெயரில் பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தவறான அனுமானங்கள் மற்றும் உறுதிமொழிகளின் அடிப்படையில் கடனை திருப்பி செலுத்துவதை நிறுத்தினால், சட்டரீதியான மற்றும் கடன் தொடர்பான விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். இத்தகைய தவறான தகவல்கள் ஒரு தனிநபரின் கடன் மதிப்பீடு, ஒட்டுமொத்த கடன் தகுதி மற்றும் கடன் பெறும் தகுதி ஆகியவற்றையும் சேதப்படுத்தக்கூடும்.
இதன் மூலம், அவர்களால் எதிர்காலத்தில் புதிய தனிநபர் கடன்கள், வீட்டு கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெறுவதும் சவாலாக மாறக்கூடும். இந்த ஏமாற்றும் நடைமுறைகளும், பிரச்சாரங்களும் - தனிநபர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஏனெனில், கடனை திருப்பி செலுத்தும் ஒழுக்கத்தில் ஏற்படும் சரிவு, செயல்படாத சொத்துக்களை (NPAs) அதிகரிக்கக்கூடும், இது வங்கிகளின் இருப்புநிலை குறிப்புகள் மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதார நலனை பாதிக்கும். இந்த காரணங்களால், இதுபோன்ற மோசடி செயல்பாடுகள் அல்லது திட்டமிட்ட பிரச்சாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கடன் வாங்குபவர்கள் இதுபோன்ற மோசடிகளி இருந்து பாதுகாப்பாக இருக்க 5 வழிகள்: முதல் மற்றும் முக்கியமான விஷயம் - வங்கி உடன் நேரடியாக சரிபார்க்கவும். அனைத்து சலுகைகள், திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளை எப்போதும் உங்கள் வங்கி உடன் மட்டுமே சரிபார்க்கவும். இதற்காக, நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கலாம் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள 'எங்களைத் தொடர்புகொள்க' (Contact Us) பகுதி மூலம் வங்கியை தொடர்புகொள்ளலாம்.
அடுத்ததாக எந்தவொரு முன்பண கட்டணத்தையும் செலுத்துவதையும் தவிர்க்கவும். முறையான நிதி நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வழங்கும் உத்தரவாதமான கடன் தள்ளுபடிகளுக்கு எந்த கட்டணத்தையும் அல்லது செலவுகளையும் வசூலிப்பதில்லை. இதுபோன்ற சலுகைகளுக்கு நீங்கள் ஒருபோதும் பலியாக கூடாது.
இதேபோல அனைத்து 'உத்தரவாதமான' வாக்குறுதிகளையும் புறக்கணிக்கவும். கடன் வழங்கும் நிறுவனத்தின் பிரதான வலைத்தளத்தில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ திட்டங்களுக்கு வெளியே, 100% கடன் தள்ளுபடி அல்லது குறிப்பிட்ட தள்ளுபடியை வழங்குவதாக கூறும் அல்லது உறுதியளிக்கும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் முற்றிலுமாக புறக்கணிக்கவும்.
கடன் தள்ளுபடி என்று கூறும் முகவர்களின் சான்றுகளை சரிபார்க்கவும். சரிபார்க்கப்படாத நபர்கள், தங்களை தாங்களே வங்கி முகவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், அல்லது வங்கிகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் முகவர்களுடன் ஈடுபட வேண்டாம். இது உங்கள் நிதி நலனுக்கு ஆபத்தானது, மேலும் நீங்கள் நிதி மோசடிக்கு ஆளாக நேரிடலாம்.
கடைசியாக அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் தகவல்களை பெறுங்கள்: இந்திய ரிசர்வ் வங்கி, செபி (SEBI), நிதி அமைச்சகம், வங்கி வலைத்தளங்கள் மற்றும் அவற்றில் வெளியிடப்படும் அறிவிப்புகள் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து வரும் அறிக்கைகள் மற்றும் அப்டேட்களை மட்டுமே பின்பற்றவும். வேறு எந்த மூன்றாம் தரப்பு ஆப்பையோ அல்லது சோர்ஸ்-ஐயோ நம்பக்கூடாது.


Click it and Unblock the Notifications