LG போன் வணிக பணிநிறுத்தம் நடந்தாலும் பயனர்களை கைவிட மாட்டோம்.. LG கொடுத்த 3 ஆண்டு சேவை உறுதி..
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தனது ஸ்மார்ட்போன்களுக்கான மென்பொருள் மேம்படுத்தல்களை தொடர்ந்து வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தடையில்லாத சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் வணிகத்தின் மூடல் அறிவிப்பைத் தொடர்ந்து நிறுவனத்தின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு LG ஓஎஸ் அப்டேட்
ஐஏஎன்எஸ் அறிவித்தபடி, எல்ஜியின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்களை எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், எல்ஜி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் அடுத்த 2 ஆண்டுகள் வரை அதன் சாப்ட்வேர் அப்டேட்டை தடையின்றி பெறும் என்றும் எல்ஜி நிறுவனம் கூறியுள்ளது. எல்ஜி வெல்வெட் மற்றும் எல்ஜி விங் ஸ்மார்ட்போன்களுக்கு, எல்ஜி 2023 வரை ஓஎஸ் அப்டேட்களை வழங்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தகுதியான எல்ஜி சாதனங்கள் எது?
தகுதியான எல்ஜி சாதனங்கள் உலகளாவிய வலைத்தளங்களில் பட்டியலிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
பயனர்களுக்கு மாற்றத்தைத் தொந்தரவில்லாமல் அளிக்க, எல்ஜி நிறுவனம் தனது உலகளாவிய வலைத்தளங்களில் அதன் நீட்டிக்கப்பட்ட ஓஎஸ் அப்டேட் திட்டங்களுக்குத் தகுதியான அனைத்து சாதனங்களையும் பட்டியலிடும் என்று கூறியுள்ளது. மேலும், எல்.ஜி.யின் ஆதரவு திட்டம் ஒவ்வொரு பிராந்தியத்திற்கு ஏற்ப மாறக்கூடும். ஆதரவு திட்டம் கூகிளின் Android OS வெளியீடு மற்றும் தயாரிப்பு விவரக்குறிப்புகளைப் பொறுத்தது.

குறைந்தது 4 ஆண்டுகளுக்கு ரிப்பேர் சேவை
எல்ஜி ஸ்மார்ட்போனை நிறுவனம் குறைந்தது 4 ஆண்டுகளுக்கு ரிப்பேர் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. தற்போதுள்ள மொபைல் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க எல்ஜி பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. எல்ஜி நிறுவனம் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்கான பழுதுபார்ப்பு சேவைகளை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அவற்றின் உற்பத்தி தேதியிலிருந்து ஆண்டுகள் கணக்கிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி பேமெண்ட் சேவை
எல்ஜி பேமெண்ட் சேவை அடுத்த 3 ஆண்டுகளுக்குச் செயலில் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மொபைல் கட்டண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, எல்ஜி மொபைல் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் வாலட் சேவையான எல்ஜி பே சேவை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுவனம் செயலில் வைத்திருக்கும் என்று முடிவு செய்துள்ளது.

ஜூலை 31 ஆம் முதல் LG போன்கள் நிறுத்தம்
தற்போதுள்ள சப்ளை மற்றும் டிமாண்ட் சங்கிலியை எளிதாக்க, எல்ஜி ஸ்மார்ட்போன் உற்பத்தியை மே இறுதி வரை தொடரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மொபைல் வணிக பணிநிறுத்தம் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கும் என்றாலும், தற்போதுள்ள சில மாடல்களின் பட்டியல் வாங்குவதற்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications