கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதிக்கு அருகில் அமைத்துள்ள கீழடியில் கிராமத்தில் தற்போது 7 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் போன்ற பிற பகுதிகளிலும் அகழாய்வு ஆராய்ச்சி குழுவினர் பள்ளம் தோண்டி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் போது, வியக்கத்தக்க புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

கீழடியின் உறை கிணறு முதல் எலும்புக்கூடுகள் வரை
இதற்கு முன்பு நடப்பட்ட 6 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சியில் பண்டைய கால பாசிமணிகள், சிறிய, பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணங்கள், விலங்கின் எலும்புகள், மனிதர்களின் எலும்புக்கூடுகள் மற்றும் சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழர்களின் பெருமிதத்தை அதிகரிக்கும் புதிய கண்டுபிடிப்பு
தற்பொழுது தமிழர்களின் பெருமிதத்தை அதிகரிக்கும் படி, 2000 ஆண்டுகள் பழமையான உரை கிணறு போன்ற தொட்டி கிடைத்துள்ளது.கீழடியில் நடத்தப்பட்டு வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய, சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைக் கிணறு போன்ற தொட்டி வடிவிலான ஒரு பொக்கிஷம் கிடைத்துள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது உரை கிணறா அல்லது தண்ணீர் தொட்டியா? குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்
அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படும் இந்த சுடுமண் வடிவிலான தொட்டி ஒரு தண்ணீர் தோட்டியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இன்னும் சிலர் இது உரை கிணற்றின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
உண்மையில் இந்த தொட்டி போன்ற பொக்கிஷம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது, அடுத்தகட்ட ஆராய்ச்சியின் மூலம் தெரியவரும் என்று அகழாய்வு ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

2000 ஆண்டுகள் பழமையான தொட்டியில் தமிழர்களின் கலை நுட்பம்
முதற்கட்ட ஆராய்ச்சியில் இந்த உரை கிணறு அல்லது தண்ணீர் தொட்டி போன்ற உருவத்தின் வயது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி இது 2000 ஆம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய பொக்கிஷம் 3 அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதிலும், இதில் இரும்பு சங்கிலி போன்ற நுட்பமான வடிவமைப்பு காணப்படுகிறது.

6 ஆம் கட்ட ஆராய்ச்சியில் கிடைத்த 38 அடுக்குகளைக் கொண்ட பெரிய உறைக் கிணறு
இதேபோல், கீழடியின் 6 ஆம் கட்ட அகழாய்வின் போது, அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 5 அடுக்கலுக்கும் மேல் கொண்ட உறைக் கிணறும், 38 அடுக்குகளைக் கொண்ட பெரிய உறைக் கிணறும் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவற்றில் இப்படியான நுணுக்கமான வேலைப்பாடுகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள் என்பதற்கான சான்று
கீழடியில் கிடைக்கப்பெற்ற இந்த சுடுமண்ணால் ஆனா அழகிய நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தொட்டியைக் காண அந்த பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு அழகிய பொக்கிஷத்தை பண்டையர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications