ஜூன்.30 கதை முடிந்தது.. LPG கேஸ் சிலிண்டர் மானியம்.. ஆதார் e-KYC-க்கு கெடு வச்சாச்சு.. இதை பண்ணுங்க.. இல்லனா?
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (LPG) மானியம் பெறும் கஸ்டமர்கள், தங்களது கேஸ் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்து இ-கேஒய்சி (e-KYC) செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இது குறித்த சில முக்கியத் தகவல்களையும், அதைச் செய்யும் முறைகளையும் இங்கு விரிவாகக் காணலாம்.
இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எல்பிஜி மானியம் தகுதியுள்ள பயனர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒரே பெயரில் பல இணைப்புகள் இருப்பதையோ அல்லது தகுதியற்றவர்கள் மானியம் பெறுவதையோ தடுக்க இது உதவுகிறது.

ஆகவே, போலியான இணைப்புகளைக் கண்டறிய முடியும். நேரடி பணப்பரிமாற்ற (DBT) முறையில் மானியம் சரியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர, உங்கள் கேஸ் இணைப்பு ஆதார் தகவல்களுடன் ஒத்துப்போவது அவசியமாகும். ஏற்கனவே ஆதார் சரிபார்ப்பு முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை.
பயோமெட்ரிக் அங்கீகாரம் இதுவரை முடிக்காதவர்கள் அல்லது நிலுவையில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். பிஎம்யுஒய் (PMUY) பயனர்களுக்கு இது வருடம் ஒருமுறை அவசியமாகிறது. இப்போது, இ-கேஒய்சி செய்வது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகளை கஸ்டமர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வீட்டிலிருந்தபடியே அல்லது உங்கள் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சிக்குச் சென்றோ இந்தச் செயல்முறையை முடிக்கலாம்.
1. மொபைல் ஆப் (Mobile App) மூலம்: உங்கள் எரிவாயு நிறுவனத்தின் (Indane, Bharat Gas, அல்லது HP Gas) அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கவும்.
இந்த ஆப்களில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் லாகின் (Login) செய்யவும்.
இ-கேஒய்சி என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஆதார் எண்ணை உள்ளிடவும். இதில் முக அங்கீகார (Face Authentication) மூலம் சரிபார்ப்பை முடிக்கலாம். இதையே கேஸ் சிலிண்டர் வழங்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கத்திலும் செய்து முடிக்க முடியும். இதிலும் இ-கேஒய்சி விருப்பம் இடம்பெற்றிருக்கும்.
2. ஏஜென்சிக்கு நேரடியாக செல்லலாம்: உங்கள் பகுதியில் உள்ள கேஸ் விநியோகம் செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு நுகர்வோர் அட்டையுடன் நேரடியாகச் செல்லலாம். அங்குள்ள பயோமெட்ரிக் கருவியில் உங்கள் கைரேகையைப் பதிவு செய்து இ-கேஒய்சி-ஐ உடனடியாகப் பூர்த்தி செய்யலாம்.
இ-கேஒய்சி செய்வதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இது முற்றிலும் இலவசமான சேவையாகும். சமீபத்திய அரசு அறிவிப்பின்படி, இ-கேஒய்சி செய்யவில்லை என்பதற்காக கேஸ் விநியோகம் உடனடியாக நிறுத்தப்படாது. இருப்பினும், மானியம் தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைக்க, இந்தச் சரிபார்ப்பை விரைந்து முடிக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒட்டுமொத்த செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம். எல்பிஜி சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு, நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் இணையதளம் அல்லது உங்கள் கேஸ் ஏஜென்சியை தொடர்புகொள்ள வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு முறை, உண்மையான பயனர்களுக்கு அரசு வழங்கும் மானியம் சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்யவே கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதுவரை இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றால், உங்கள் எரிவாயு நிறுவனத்தின் ஆப்பை பயன்படுத்தியோ அல்லது நேரடியாக சென்று அதை முடித்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications