மறுபடியுமா! ஏர்டெல், VI, ஜியோ நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்த திட்டம்.. வெளியானது முக்கிய தகவல்..
இந்தியாவில் ஜியோ (jio), வோபோன் ஐடியா (VI), ஏர்டெல் (Airtel) ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த ஆண்டு தான் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தின. இந்நிலையில் மீண்டும் ப்ரீபெய்ட் திட்டங்கள் உயர்த்தப்படும் என்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
20 சதவீதம் வரை
2025-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இது ஆறு ஆண்டுகளில் நான்காவது பெரிய கட்டண உயர்வாக இருக்ககூடும் என்று பெர்ன்ஸ்டீன் (Bernstein) நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்தன. அதுவும் 11 முதல் 25 சதவீதம் வரையில் கட்டண உயர்வு இருந்தது. இதுதவிர ரீசார்ஜ் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பெர்ன்ஸ்டீன் நிறுவன ஆய்வறிக்கையில், இந்த 2025-ம் ஆண்டின் இறுதியில் கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்துறை முழுவதும் நடந்து வரும் கட்டண மாற்ற முயற்சிகளுக்கு ஏற்ப, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் கட்டண உயர்வு இருக்கும் என்றும், இந்த நடவடிக்கை தொலைத்தொடர்பு துறைக்கான வருவாய் தெரிவுநிலையை மேம்படுத்தக்கூடும் என்று பெர்ன்ஸ்டீனின் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் நகரப்புற 5ஜி கவரேஜ் முழுமையாக உள்ள நிலையில், ஆபரேட்டர்கள் மற்றும் வருவாய் விகிதத்தின் முன்னேற்றத்திற்குக் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் தற்போது அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் 5ஜி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் செலவுகளை ஈடுகட்டவும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் 4ஜி
அதேபோல் கடந்த ஆண்டு இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியதால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் இணைந்தனர். இந்நிலையில் மீண்டும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தும் என்பதால் இன்னும் அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. அதாவது மார்ச் 5, 2025 நிலவரப்படி 83,629 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் நிறுவியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்நிறுவனம் 1 லட்சம் 4G தளங்களை நிறுவிய பிறகு, 5G-ஐ அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications