எம்மாடியோவ்.. மாசத்துக்கு 1000 கோடி GB டேட்டாவை பயன்படுத்தும் Jio யூசர்கள்.. அப்படியென்ன தேவை இருக்கும்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) யூசர்கள் ஒரு மாதத்துக்கு 1,000 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு டேட்டாவை பயன்படுத்தும் ஜியோ யூசர்கள் மாதம் எவ்வளவு தொகையை டேட்டாவுக்காக செலவிடுகிறார்கள் என்பது குறித்த விவரங்களை காணுங்கள்.
இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகமான பிறகு டேட்டா பயன்பாடு (Data Consumption) வியக்கத்தக்க வகையில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு டெலிகாம் (Telecom) நிறுவனங்களும் நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டு சென்றுவிட்டன.

இதில் ரிலையன்ஸ் ஜியோ வெறும் 7 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 40 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜியோ சிம் கார்டை பயன்படுத்துகின்றனர். 2015ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட ஜியோ 4ஜி சேவை முதலில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
அதன்பின் 2016ஆம் ஆண்டு முதல் டேட்டா பயன்பாடு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்க தொடங்கியது. அப்போதைய புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுதோறும் 460 கோடி ஜிபி டேட்டாவை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த எண்ணிக்கை கொரோனா ஊரடங்கு (Covid Lockdown) காலத்தில் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஏனென்றால், பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியை செய்ய ஊழியர்களை அறிவுறுத்தியது.
பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகள் (Online Class) மூலமே பாடம் கற்று வந்தனர். அமேசான் பிரைம் (Amazon Prime) நெட்ஃபிளிக்ஸ் (Netflix) டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற ஓடிடி (OTT) தளங்களும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிட்டன. இப்படி எங்கு பார்த்தாலும் இன்டெர்னெட் (Internet) தேவைப்பட்டது.
இதில் வேடிக்கை என்றவென்றால், ஊரடங்கு முடிவுக்கு வந்தும் மக்கள் டேட்டா பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவில்லை. மறாக டேட்டாவை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு டேட்டா பயன்பாடு அதிகரித்து விட்டது. இதில் ஜியோ யூசர்களே முன்னணியில் இருக்கின்றனர்.
2023ஆம் ஆண்டின் ஜனவரியில் மட்டும் ஜியோ யூசர்கள் 1,000 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்தியுள்ளனர். இந்த அளவு பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் தொடர்ந்துள்ளது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 3,000 கோடிக்கும் அதிகமான ஜிபி டேட்டாவை ஜியோ யூசர்கள் மட்டுமே பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
அதன்படி சராசரியாக ஒரு ஜியோ யூசர் மாதம் 23 ஜிபி டேட்டைவை பயன்படுத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த அளவு 2021ஆம் ஆண்டில் 13 ஜிபியாக மட்டுமே இருந்தது. இப்போது 10 ஜிபி டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஜியோ நிறுவனம் 5ஜி (5G) சேவையை 2,600 நகரங்களில் தொடங்கி இருக்கிறது. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் டேட்டா பயன்பாடு பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது.
டேட்டா மட்டுமல்லா வாய்ஸ் கால் (Voice Call) பேசுவதும் ஜியோ யூசர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒரு ஜியோ யூசர் ஒரு மாதத்தில் சராசரியாக 1,000 நிமிடங்களை கால் பேசுவதற்காக செலவழிக்கிறார். இப்படி மொத்த யூசர்களும் ஆண்டுக்கு 1,459 கோடி நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் பேசுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இப்படி டேட்டா மற்றும் வாய்ஸ் காலுக்காக மாதம் 178.8 ரூபாயை ஜியோ யூசர்கள் செலவழிக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications