ஜியோ போட்ட போடு.. மலிவு விலை காலம் முடிந்தது.. குறைந்தபட்சம் ரூ.149 இருந்தா மட்டுமே ரீசார்ஜ்!
இந்தியாவில் கோடிக்கணக்கான நடுத்தர மக்களுக்கு மிகவும் பொருத்தமான விலையில், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வழங்கிய ஜியோ ரூ.119 திட்டம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு பதிலாக குறைந்தபட்ச விலையில் கிடைக்கக்கூடிய வகையில் மற்றொரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய மூன்று சலுகைகளும் அடங்கிய மலிவு விலை திட்டங்களை வைத்திருக்கின்றன. இதில், ஜியோ நிறுவனம் மட்டுமே, மற்ற நிறுவனங்களைவிட மிகவும் மலிவான விலையில் அதாவது, ரூ.119 மதிப்பிலான திட்டத்தில் அந்த மூன்று சலுகைகளையும் வழங்கியது.

இந்த ரூ.119 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5 ஜிபி டெய்லி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இதே சலுகைகளை கொண்ட ஏர்டெல்லின் திட்டத்துக்கு ரூ.155 வசூலிக்கப்படுகிறது. அதேபோல வேடபோன் ஐடியாவிலும் ரூ.155 வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் வேலிடிட்டியிலும் மாற்றங்கள் இருக்கின்றன.
ஆகவே, ஜியோவின் ரூ.119 திட்டம் பெரும்பாலான மக்களின் ரீப்பீட் ரீசார்ஜ் திட்டமாக இருந்து வந்தது. இந்த சூழலில் ஜியோ நிறுவனம் அந்த திட்டத்தை அதிரடியாக நீக்கிவிட்டது. அதற்குபதிலாக ரூ.149 விலையில் கிடைக்கூடிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை, இப்போது பார்ப்போம்.
ஜியோ ரூ 149 பிளான் விவரங்கள் (Jio Rs 149 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 1 ஜிபி டெய்லி டேட்டா (1GB Daily Data) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் (100 SMS/Day) சலுகைகள் கிடைக்கும்.
அதோடு ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோ டிவி (JioTV) ஆகியவற்றின் சந்தாவும் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் ஜியோ ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி (Jio Truly Unlimited 5G) சலுகையும் கொடுக்கப்படும். நீங்கள் ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெறுபவராக இருந்தால், 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்த கூடியது. ஜியோவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று மூன்றும் வழங்கப்படும் திட்டங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது, இந்த ரூ.149 திட்டம் மட்டுமேயாகும். இதற்கும் குறைவான விலையில் திட்டங்கள் கிடையாது.
இந்த திட்டத்தை ஏர்டெல்லின் மலிவு விலை திட்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. அதாவது, ஏர்டெல்லில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொண்ட மலிவான திட்டத்தின் விலை ரூ.155ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது ஜியோவின் ரூ.149 திட்டத்தை விட ரூ.6 அதிக விலை கொண்ட திட்டமாக இருந்தாலும், 4 நாட்களுக்கு கூடுதலாக சலுகைகளை வழங்குகிறது. அப்படி பார்த்தால், இந்த ரூ.6க்கு உங்களுக்கு 4 ஜிபி டேட்டா, 400 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களையும் எப்படி அலசி ஆராய்ந்து பார்த்தாலும், ஜியோவைவிட ஏர்டெல்லில் மலிவான விலையில் நல்ல சலுகைகள் கிடைக்கிறது. இதனால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அதேவேளையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, இந்த அதிரடி மாற்றம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








