6G சேவைக்குத் தயாராகும் ஜியோ.. ஆகாஷ் அம்பானி வெளியிட்ட முக்கிய தகவல்.. உற்சாகத்தில் பயனர்கள்..
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 6G சேவையைத் தொடங்குவதற்காகப் புதிதாக டவர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்கத் தேவையில்லை எனத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பத்தில் மென்பொருளை மேம்படுத்துவதன் மூலம் 6G சேவைக்குத் தயாராக ஜியோ முடிவு செய்துள்ளது. இதை ஜியோவின் IPO ஊடகச் சந்திப்பில் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத் தொழில்நுட்பங்களை ஜியோ நிறுவனமே உருவாக்கி, அதன் மூலம் இந்திய மக்களுக்குச் சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் குறித்துப் பேசும்போது ஆகாஷ் அம்பானி இதைத் தெரிவித்தார். இந்தியா முழுவதும் ஜியோவுக்கு 3.6 லட்சத்துக்கும் அதிகமான தொலைத்தொடர்பு கோபுரங்கள் (டவர்கள்) உள்ளன. மேலும், 10 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தில் ஃபைபர் கேபிள் இணைப்புகளையும் அந்நிறுவனம் கொண்டுள்ளது.
ஜியோவின் வளர்ச்சிக்கு, அந்நிறுவனமே உருவாக்கிய சொந்தத் தொழில்நுட்பங்கள் முக்கிய அடித்தளமாக உள்ளதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். மொபைல் நெட்வொர்க், வீடுகளுக்கான இணைய சேவைகள், தொழில்நுட்ப சாதனங்கள், இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகள் எனப் பல்வேறு சேவைகளுக்கு ஜியோ தனது சொந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
அதேபோல் ஜியோ நிறுவனத்தில் 12,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், 7,220-க்கும் அதிகமான காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, அவற்றை நாடு முழுவதும் அதிக அளவில் பயன்படுத்துவதற்கு இந்தக் குழுவின் பங்களிப்பு முக்கியமாக இருப்பதாக அவர் கூறினார்.
குறிப்பாக ஜியோவின் சொந்தத் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இதன் மூலம், இந்தியா மற்ற நாடுகளுக்கும் தொழில்நுட்பங்களை வழங்கும் நாடாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி வளர்ச்சி குறித்துப் பேசிய ஆகாஷ் அம்பானி, அந்நிறுவனத்தின் 5ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்துள்ளதாகத் தெரிவித்தார். சீனாவுக்கு வெளியே அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக ஜியோ இருப்பதாகவும், 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு வாடிக்கையாளர்களை மிக வேகமாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜியோ நிறுவனம் வெறும் 19 மாதங்களில் நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுபடுத்தியதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், தினமும் 12 மணி நேர வேலை நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தை நிறுவியதாகவும் அவர் கூறினார். ஜியோவின் பரந்த நெட்வொர்க் வசதிகளும், அதனிடம் உள்ள அலைக்கற்றைகளும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக இருப்பதாகவும், இதுபோன்ற கட்டமைப்பை மற்ற நிறுவனங்கள் உருவாக்குவது எளிதல்ல என்றும் அவர் விளக்கினார்.

ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மொபைல் சேவைகள், வீடுகளுக்கான இணைய வசதிகள், நிறுவனங்களுக்கான சேவைகள் மற்றும் சொந்தத் தொழில்நுட்பங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது ஆகிய நான்கு விஷயங்கள் முக்கியமாக இருக்கும் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். மேலும், இந்தியாவில் உருவாக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
ஜியோவின் வளர்ச்சி புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அமையும் என்று ஆகாஷ் அம்பானி கூறினார். ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, மென்பொருள் மாற்றங்கள் மூலம் 6G சேவைக்குத் தயாராக ஜியோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.


Click it and Unblock the Notifications
