1,600 செயற்கைக்கோள்கள், 23 தரை நிலையங்கள்.. இந்தியா முழுவதும் தடையற்ற இணைய சேவை வழங்க ஜியோ மெகா திட்டம்!
ரிலையன்ஸ் ஜியோ, மொபைல் டவர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்களை மட்டுமே நம்பியிருக்காமல், செயற்கைக்கோள்கள் மூலம் தனது நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்தியா முழுவதும் சுமார் 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களைக் கொண்ட புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க அந்நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
அதுவும் இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வணிக ரீதியாகத் தொடங்குவதற்கான மீதமுள்ள அனுமதிகளைப் பெற எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இன்னும் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில், ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய செயற்கைக்கோள் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2026 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது செயற்கைக்கோள் இணைப்புத் திட்டங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்தது.
தொலைத்தொடர்பு வசதிகளை அமைப்பது கடினமாக உள்ள இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையச் சேவையை கொண்டு சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக, ஏற்கெனவே உள்ள தரைவழி நெட்வொர்க்குடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியை அந்நிறுவனம் "இறையாண்மை செயற்கைக்கோள் இணைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜியோவின் இந்தத் திட்டத்தின்படி, பூமிக்கு அருகிலுள்ள தாழ்வான சுற்றுப்பாதையில் (LEO) சுமார் 1,600 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. மேலும், இந்தச் செயற்கைக்கோள்களை தரைவழி நெட்வொர்க்குடன் இணைப்பதற்காக நாடு முழுவதும் 23 தரை நிலையங்களை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் உட்பட, நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதிகளிலும் இணைய இணைப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என ஜியோ தெரிவித்துள்ளது. குறிப்பாக, தொலைதூரக் கிராமங்கள், தீவுகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தடையற்ற தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.
செயற்கைக்கோள் வலையமைப்பைத் தனியாகச் செயல்படுத்தாமல், ஏற்கெனவே உள்ள மொபைல் நெட்வொர்க் மற்றும் ஃபைபர் கேபிள் வசதிகளுடன் இணைத்து பயன்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தனது தற்போதைய தொலைத்தொடர்பு சேவைகளை மேலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜியோவின் இந்தச் செயற்கைக்கோள் வலையமைப்பை நிறுவனங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இணைய இணைப்பை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். மேலும், விமானப் போக்குவரத்து, கடல்சார் சேவைகள், அரசு மற்றும் பாதுகாப்புத் துறைகள், பேரிடர் கால மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கைக்கோள் திட்டத்தின் வடிவமைப்பு, பொறியியல் பணிகள், ஒருங்கிணைப்பு, சோதனை, ஏவுதல், நிறுவுதல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய செயல்பாடுகளும் இந்தியாவிலேயே நடைபெற வேண்டும் என ஜியோ விரும்புகிறது. இதன் மூலம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான முழுமையான உற்பத்தி மற்றும் சேவைச் சங்கிலியை நாட்டிற்குள் உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சவாலான பகுதிகளில் ஃபைபர் கேபிள்கள் மற்றும் மொபைல் டவர்கள் அமைப்பது மிகவும் கடினம். இதுபோன்ற பகுதிகளில் நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்த ஜியோ செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலம், அதிக செலவின்றி தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையச் சேவையை கொண்டு சேர்க்க முடியும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications
