15000 ரூபாயில் புது சக்திவாய்ந்த லேப்டாப் ரெடி செய்யும் ரிலையன்ஸ்.. Jio Cloud Laptop என்றால் என்ன?
ரூ.15,000 விலையில் லேப்டாப் சாதனத்தை வாங்க முடியுமா? என்ற கேள்விக்கு "முடியும்" என்று பதிலடி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் மட்டுமே. இப்போது, இதே விலையில் கிளவுட் கம்ப்யூட்டிங் லேப்டாப்களை அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது பிசி (PC) என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் சாதனத்தின் சந்தையை அதன் புதிய சாதனம் கொண்டு தாக்க திட்டமிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் சமீபத்தில் புதிய ஜியோபுக் டிவைஸை வெறும் ரூ.14,499 என்ற குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

என்ன தான் இது மிகவும் குறைந்த விலையில், ஒரு பட்ஜெட் போன் விலைக்கு வாங்க கிடைத்தாலும், சக்திவாய்ந்த லேப்டாப்பைப் பெற விரும்பும் நுகர்வோருக்கு இந்த லேப்டாப் அவ்வளவு சிறந்த தேர்வாக இருக்காது. நுகர்வோருக்கு தேவையான அந்த ஒரு சக்தி வாய்ந்த லேப்டாப்பை இதே விலையில் வழங்க ஜியோ விரும்புகிறது. சமீபத்திய அறிக்கையின் படி, இந்த முயற்சியை 'கிளவுட்' சேவை மூலம் நிறைவேற்ற ஜியோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோ விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஜியோ கிளவுட் லேப்டாப் (Jio Cloud Laptop):
ஆம், விரைவில் ஜியோ நிறுவனம் கிளவுட் சேவையுடன் இயங்கும் லேப்டாப் சாதனங்களை உருவாக்கி, அவற்றை இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் விற்பனை செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளவுட் அம்சத்துடன் இயங்கும் லேப்டாப் சாதனங்களின் செயலாக்கமும், சேமிப்பகமும் ஜியோ கிளவுட்டில் நடக்கும். இது ஆன்லைன் ஸ்டோரேஜ் அம்சமாக லேப்டாப்பை இயங்க அனுமதிக்கும்.
இது லேப்டாப் இன் விலையை கணிசமாகக் குறைக்க உதவும். ஏனென்றால், சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் ஸ்டோரேஜ் சேர்ப்பதற்கான செலவு இதன் மூலம் ஒட்டுமொத்தமாக குறைக்கப்படும். ஜியோ தற்போது எதிர்பார்க்கப்படும் கிளவுட் கம்ப்யூட்டருக்காக ஹெச்பி குரோம்புக் மூலம் சோதனைகளை நடத்தி வருவதாக சில லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங் சாதனங்கள் ஒரு புதிய விஷயமாகும் (cloud computing device):
இந்த லேப்டாப்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதே ஜியோவின் நோக்கம், ஆனால் கிளவுட் கம்ப்யூட்டிங்கை அனுமதிப்பதற்கு சந்தா கட்டணத்தை ஜியோ வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் உதவியுடன் ஒரே லேப்டாப் பல பயனர்கள் பல சந்தாக்களைக் கொண்டிருக்கலாம். இந்திய சந்தையில் நுகர்வோர் மத்தியில் இது ஒரு 'புதிய விஷயம்' ஆகும்.
கல்வி நிறுவனங்கள் கூட இது போன்ற மடிக்கணினி மூலம் பெருமளவில் பயனடையலாம், ஏனெனில் இது அவர்களுக்கு வன்பொருள் செலவைக் குறைக்கிறது. ஜியோ கிளவுட் லேப்டாப் (Jio Cloud Laptop) பயனர்களுக்கு சிறந்த இணைப்பு அனுபவத்தை வழங்குவதற்காக நாடு முழுவதும் அமைத்துள்ள மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றை ஜியோ பயன்படுத்தும்.
ஜியோ கிளவுட் லேப்டாப் வெளிவருவது உறுதியானது (Jio Cloud Laptop launch confirmed):
Jio அதன் கிளவுட் பிஸி (Cloud PC) ஐ ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (Reliance Industries Limited) 45வது ஏஜிஎம்மில் (AGM) கிளவுட் பிசி பற்றிய தகவலை நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனம் அனுபவம் வாய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு, ஜியோ கிளவுட் மூலம் இயங்கும் லேப்டாப் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பது குறித்த எந்த தகவலையும் ரிலையன்ஸ் ஜியோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த லேப்டாப் சாதனம் குறித்த தகவல் இணையத்தில் அடிப்பட துவங்கியுள்ளதால், நிறுவனம் இதை உருவாக்கும் வேலையில் இறங்கியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது. விரைவில் இது குறித்த கூடுதல் தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








