வச்சாங்க பாரு வெடி.. Jio, Airtel ரீசார்ஜ் விலைகள் பழையபடி குறைக்கப்படும்.. எப்போது? இந்திய அரசு ஸ்கெட்ச்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே, கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் தத்தம் ரீசார்ஜ் திட்டங்கள் மீதான விலை உயர்வை அறிவித்தன. அந்த நேரத்தில் - சேவைகள் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்த, தொழில்துறையில் இதுபோன்ற கட்டண உயர்வு மிகவும் அவசியம் என்று டெலிகாம் ஆப்ரேட்டர்கள் விளக்கம் அளித்திருந்தன.
ஆனால் அந்த விளக்கங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுகொண்டது போல் தெரியவில்லை. ஜியோ, ஏர்டெல், விஐ கட்டண உயர்வானது, பல நுகர்வோர்களை பிஎஸ்என்எல்-க்கு இடம்பெயர தூண்டியது. இருந்தாலும் கூட தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலைகளை குறைந்தபாடில்லை; வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் புதிய திட்டங்களை (பெரிய எண்ணிக்கையில்) அறிமுகம் செய்யவில்லை.

எவ்வாறாயினும், வரவிருக்கும் சில அரசாங்க முடிவுகளின் அடிப்படையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய சமீபத்திய விலை உயர்வை திரும்ப பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா.காம் (India.com) வழியாக கிடைத்த தகவலின்படி, தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்காக வாதிடும் ஒரு தொழில் அமைப்பான இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கமானது (Cellular Operators Association of India - COAI), தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மீது விதிக்கப்படும் உரிமக் கட்டணத்தை குறைக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது, உரிமக் கட்டணம் (License fee) மொத்த வருவாயில் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 5 சதவீத நெட்வொர்க் பொறுப்புக் கட்டணத்தை உள்ளடக்கியது. இந்த உரிமக் கட்டணத்தை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைக்கும்படியான, திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பை சிஓஏஐ பரிந்துரைக்கிறது. இந்த கட்டணங்களை குறைப்பதன் மூலம் மிகவும் திறமையான நெட்வொர்க் மேம்படுத்தல்கள் மற்றும் விரிவாக்கங்களை செயல்படுத்த முடியும் என்று சிஓஏஐ நம்புகிறது.
இந்த கோரிக்கையை அரசும், டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஏற்றுக்கொண்டால், அது தொழில்துறைக்கு கணிசமான பலனை தரக்கூடும். இது விலை உயர்த்தப்பட்ட ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா திட்டங்களை (கொஞ்சம் கொஞ்சமாக) பழையபடி மலிவாக்கும் சூழ்நிலையை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) நிகழ்வில் கூட, பல அதிகாரிகள், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR), கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பங்களிப்புகள், சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் பெருநிறுவன வரிகளை செலுத்துவதற்கான கடமைகள் போன்ற தற்போதைய நிதி அழுத்தங்களை கடுமையாக எடுத்துக்காட்டினர். இவைகள் எல்லாம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முதலீடு செய்வதற்கான தங்களுடைய (குறிப்பாக டெலிகாம் ஆப்ரேட்டர்களின்) திறனை கட்டுப்படுத்துவதாகவும் கூறினார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தனியார் டெலிகாம் நிறுவனங்களின் விலை உயர்வு, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு மிகவும் லாபகரமான விஷயமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த காலாண்டில் ஒவ்வொரு மாதமும் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 50-60 லட்சம் அதிகரித்தும் உள்ளது!
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்திருந்ததும், அதோடு சேர்த்து 7 புதிய சேவைகளை அறிவித்து இருந்ததும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது. கூடவே பிஎஸ்என்எல் நிறுவனமானது 3.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளில் (3.6 GHz and 700 MHz spectrum bands), உள்நாட்டு 5ஜி ஆர்ஏஎன் (ரேடியோ அணுகல் நெட்வொர்க் - Radio access network) மற்றும் கோர் ஆகியவற்றை வெற்றிகரமாக சோதித்தும் உள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனமானது வருகிற 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது 5ஜி சேவையை ஆக்கபூர்வமாக அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஜோதிராதித்யா எம் சிந்தியாவும் இதை உறுதிப்படுத்தும் வண்ணம், பிஎஸ்என்எல் 5ஜி விரைவில் அறிமுமாகும் என்று கூறியுள்ளார்.பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தி வரும் 4ஜி தளங்கள் (4G Sites) ஆனது 2025 ஆம் ஆண்டில் 5ஜி ஆக மேம்படுத்தப்படும். Source: www.india.com


Click it and Unblock the Notifications








