பேஸிக் ரீசார்ஜ்கள் காலி.. தேதி குறித்த டெலிகாம் வல்லுனர்கள்.. Jio, Airtel விலை மீண்டும் உயரும்.. எப்போது?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Airtel) உள்ளிட்ட டெலிகாம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது, முன்னதாக மதிப்பிடப்பட்ட நவம்பர்-டிசம்பர் காலகட்டத்திற்கு முன்பாகவே மற்றொரு சுற்று கட்டண உயர்வை (Tariff Hikes) திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எப்போது அமலுக்கு வரும்? கம்யூனிகேஷன்ஸ் டூடே (Communications Today) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 இல் செய்ததை போலவே இந்த 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் வல்லுனர்களின் கணிப்பின்படி ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்த வலுவான நிலையில் இருப்பதாக நம்புகின்றனர்.

மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் இன்னமும் சந்தையில் தங்களுக்கான இடங்களை பிடிக்க போராடி வருவதால் - போட்டியாளர்களிடம் (அதாவது ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனங்களிடம்) தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் ஆபத்தும் குறைவாகவே உள்ளது.
மேலும், கடந்த முறை அமலுக்கு வந்த மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வில் டிராய் (TRAI) தலையிடாதது, தனியார் நிறுவனங்களை மறுபடியும் விலை உயர்விற்கு ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது குறைந்த போட்டிதன்மை மற்றும் தொடர்ச்சியான ஒழுங்குமுறை சகிப்புத்தன்மை (Regulatory forbearance) உடன் கூடிய சாதகமான சந்தை சூழலால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இம்முறை எவ்வளவு விலை உயர்த்தப்படலாம்? ஜூலை - ஆகஸ்ட் 2025 இல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படும் விலை உயர்வு எப்படி இருக்கும், எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து எந்த விவரங்களும் இல்லை. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜூலை 2024 இல், அனைத்து முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 10% முதல் 27% வரை கட்டணங்களை உயர்த்தின.
குறிப்பிடத்தக்க வகையில் - ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ப்ரீபெய்டு திட்டத்தை ரூ.179 இல் இருந்து ரூ.199 ஆக அதிகரித்தது. ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பேஸிக் ரீசார்ஜ் ஆனது ரூ.399 இல் இருந்து ரூ.449 ஆக உயர்த்தப்பட்டது. ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை மாற்றாமல் அப்படியே வைத்திருந்ததால், பிஎஸ்என்எல் நிறுவனத்தால் "தற்காலி" சந்தாதாரர்களை மட்டுமே பெற முடிந்தது.

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்களுமே ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை இழந்திருந்தாலும் பின்னர் மீண்டு வந்தன. மே 2025 நிலவரப்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 1.35 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளாட்டி, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையஸின் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முறையே 2.5 லட்சம் மற்றும் 27 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்துள்ளன.
வரவிருக்கும் விலை உயர்வு எந்த அளவிற்கு உறுதியானதாக இருக்கலாம்? கடந்த பிப்ரவரி மாதம், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல், தொழில் நிதி ரீதியாக ஸ்திரமாக இருப்பதற்கும், நிலையான அடிப்படையில் நியாயமான வருமானத்தை வழங்குவதற்கும் இன்னும் சிறிது கட்டண திருத்தும் தேவைப்படுகிறது என்று கூறி இருந்தார்.
அதாவது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களின் விலைகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் அது எப்போது நடக்கும், எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது பற்றி, அந்த நேரத்தில் அவர் எதுவும் பேசவில்லை. இதேபோல், வோடபோன் ஐடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன அக்ஷயா மூந்த்ரா, ஒன்பது மாத இடைவெளியில் நிகழும் கட்டண உயர்வுகளை நியாயப்படுத்தி உள்ளார்.
ஆக பயனர்கள் என்ன எதிர்பார்க்கலாம்? டெலிகாம் நுகர்வோர்கள் - மற்றொரு சுற்று மொபைல் ரீசார்ஜ் மற்றும் டேட்டா ரீசார்ஜ் விலை உயர்விற்கு தயாராக வேண்டும். விலை உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில் கண்டிப்பாக பேஸிக் ரீபெய்ட் மற்றும் பேஸிக் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகள் உயரும்.
மொபைல் ரீசார்ஜ் விலை உயர்வு ஆனது டெலிகாம் தொழில்துறையின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு அவசியமாக இருக்கலாம், இருந்தாலும் கூட பட்ஜெட் விலை திட்டங்களை நம்பியுள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்கு நிச்சயம் கவலைகுரியதாக இருக்கும்!


Click it and Unblock the Notifications