பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. 3341 காப்புரிமைகள்.. Jio 6G க்கு பேஸ் போட்ட அம்பானி.. எப்போ அறிமுகம்?
10 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் கேட்டாலும் கூட சொல்லுவார்க்ள. முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான டெலிகாம் ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தான் - இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கஸ்டமர்களை / சந்தாதாரர்களை கொண்ட நிறுவனம் என்று!
ஜியோ நிறுவனமானது 191 மில்லியன் வாடிக்கையாளர்களுடன், சீனாவிற்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய 5ஜி நிறுவனமாக உள்ளது. இப்படி - ஏற்கனவே டாப் லெவலில் இருக்கும் ஜியோ நிறுவனம் அடுத்த லெவலுக்கு செல்ல.. என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் மிகச்சரியாக செய்து வருகிறது; பலமான அடித்தளங்களை போட்டு வருகிறது. குறிப்பாக ஜியோ 6ஜி சேவைக்காக!

ஜியோ நிறுவனமானது 6ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் எப்போதுமே மற்றவர்களை விட முன்னணியில் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. இது பங்குதாரர்களுக்கு நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும் ஒரு உத்தி என்று நேற்று (ஆகஸ்ட் 7) வெளியிட்ட தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கை, ஜியோ நிறுவனமானது எதிர்கால தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக 6ஜி தொழில்நுட்பத்தை தீவிரமாக ஆராய்ந்து, மேம்படுத்தி வருகிறது. 6ஜி விஷயத்தில் - 6ஜி மேம்பாடு மற்றும் 6ஜி பயன்பாட்டில் உலகளாவிய தலைவராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜியோ பணியாற்றி வருகிறது.
இதுவரை ஜியோ நிறுவனம் 3,341 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது, இதில் 25 நிதியாண்டில் 1,654 காப்புரிமைகள் அடங்கும். ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஆனது இந்த நிதியாண்டில் 154 காப்புரிமைகளை பெற்றுள்ளன. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, ஜியோ நிறுவனம் 485 காப்புரிமைகளை வைத்திருந்தது. ஜியோவின் கூற்றுப்படி, 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்களில் இந்தியாவின் மிகப்பெரிய காப்புரிமை வைத்திருப்பது ஜியோ நிறுவனம் தான்.
எப்போது ஜியோ 6ஜி அறிமுகமாகும்? ஜியோவின் 6ஜி நெட்வொர்க்கிற்கான சரியான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது 2030 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6ஜி தொழில்நுட்பத்தின் எதிர்பார்க்கப்படும் உலகளாவிய வெளியீட்டுடன் ஒத்துப்போகிறது. அந்த நேரத்தில் அதை முதலில் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும், முதலில் அறிமுகம் செய்யும் நிறுவனமாக ஜியோவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்தியாவில் ஸ்டார்லிங்கின் பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்க ஒரு செயற்கைக்கோள் தொடர்பு தளத்தை உருவாக்கி வருவதாகவும், இதற்காக எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸுடன் கூட்டு சேர்ந்து வேலை செய்து வருவதாகவும் ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ தனது உள்கட்டமைப்பு, மென்பொருள் நிபுணத்துவம் மற்றும் தரவை பயன்படுத்தி இந்தியாவில் உலகின் மிகக் குறைந்த ஏஐ இயக்கச் செலவுகளை அடையவும், தொழில்நுட்பத்தை எங்கும் பரவச் செய்யவும் உலகளாவிய கூட்டாளர்களுடன் ஒத்துழைக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோஃபைபர் சேவை ஆனது 18 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை அடைந்துள்ளதாகவும், ஜியோவின் டிஜிட்டல் தளங்களின் தொகுப்பு அதன் 438 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு மற்றும் கல்விக்காக அணுகக்கூடியதாக இருப்பதாகவும் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜியோவின் ஃபைபர் நெட்வொர்க் மற்றும் பிக்ஸடு வயர்லெஸ் அணுகல் (FWA) வெளியீடு 100 மில்லியன் வளாகங்களை டிஜிட்டல் சொல்யூஷன்களுடன் இணைக்கும் பாதையில் உள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.
மொபிலிட்டி வணிகம், நிறுவன சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் விரிவாக்கம் ஆகியவற்றில் கட்டண அதிகரிப்பு காரணமாக டிஜிட்டல் சேவைகள் ஆனது 25 நிதியாண்டில் ரூ.154,119 கோடி வருவாயை எட்டி உள்ளன. ஜியோவின் மொத்த வயர்லெஸ் பிராட்பேண்ட் பயனர் தளம் 488 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக 2023 நிதியாண்டில் ரூ.179 ஆக இருந்த ஒரு பயனரின் சராசரி வருவாய் ஆனது இப்போது ரூ.185 ஆக அதிகரித்துள்ளது!


Click it and Unblock the Notifications








