ஒரேவொரு ஸ்கிரீன்ஷாட்.. 2 நிமிடங்களில் பறிபோன கோல்டு காயின்ஸ்.. நகைக்கடையில் டிஜிட்டல் மோசடி!
ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை வந்ததும் போதும், அதனால் வந்த வினையும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பெண் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். வெறும் ஸ்கிரீன்ஷாட்டை வைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்களை ஒரு திருடன் லாவகமாக எடுத்துச்சென்றுள்ளான்.
சில நிமிடங்களில் இந்த மோசடி சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறான். இந்த மோசடி எப்படி நடந்தது? போலியான பேமெண்ட் மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது? உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஹரியானா மாநிலம் குருகிராமில் செயல்பட்டுவரும் பிரபல நகைக்கடைக்கு சில நாட்களுக்கு முன்பு, டிப்டாப்பாக வந்தவொரு நபர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்களை வங்கியிருக்கிறார்.

அதன்பின், அந்த கடையின் உரிமையாளர் பணம் கேட்கையில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக தெரிவித்திருக்கிறார். இதனை நம்பிய கடை உரிமையாளர் தனது கணவரின் வங்கி விவரங்களை அவரிடம் கொடுத்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே ரூ.2 லட்சம் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆன்லைன் பேமெண்ட் ஸ்கிரீன்ஷாட்டை (Screenshot) அந்த நபர், கடை உரிமையாளரிடம் காண்பித்துள்ளார்.
இதையும் நம்பிய உரிமையாளர், அந்த நபரை அங்கிருந்து அனுப்பிவிட்டார். அரை மணி நேரத்துக்கு பின்பு, அந்த கடை உரிமையாளர் அவரது கணவரின் வங்கி கணக்கை சோதனை செய்தபோது பணம் வரவில்லையென்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தங்க நாணயங்களை வாங்கி சென்ற நபருக்கு கால் செய்துள்ளார். அப்போதும், அந்த நபர் பணம் செலுத்தப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார்.
இது போலியான ஸ்கிரீன்ஷாட் என்பதை உணர்ந்த கடை உரிமையாளர், போலீசில் புகார் அளித்துவிடுவேன் என்று அந்த நபரை எச்சரித்த பின்பு, அந்த நபர் டெல்லியில் உள்ள நேரு அரண்மனைக்கு வருமாறும், அங்கு பணத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அங்கு நகைக்கடை உரிமையாளர் சென்றும் அந்த நபர் அங்கு வரவில்லை என்பதால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? தனிப்பட்ட முறையிலோ அல்லது வணிக ரீதியாகவோ அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து பணம் பெறும்போது, அவர்கள் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்க்க வேண்டும். அதில் உங்களது வங்கி கணக்கு எண், வங்கி ஐஎப்எஸ்சி கோட் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
வாங்கும் தொகை பெரிதாக இருப்பின், உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும்வரையிலோ அல்லது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் வரையிலோ காத்திருந்து அதன்பின் அந்த நபர்களை அனுப்புவது நல்லது. அதேபோல கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆப்களின் கியூஆர் கோட் ஸ்கேனிங் போது, சவுண்ட் பாக்ஸ்களை பயன்படுத்துவது மோசடிகளை தவிர்க்க வழிவகுக்கும்.
மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








