நம்பி ஏமாந்து போன NASA! ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் சொன்ன உண்மை! என்னாச்சு தெரியமா?
பூமி போல் உயிர்களை ஆதரிக்கக்கூடிய ஒரு உயிருள்ள கிரகத்தை மனிதர்கள் மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களின் தேடுதலில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இது கண்டறிந்த பொக்கிஷம் தான் டிராபிஸ்ட்-1 என்ற நட்சத்திர அமைப்பு.
டிராபிஸ்ட்-1 நட்சத்திர அமைப்பு (TRAPPIST-1 Star System) பூமியில் இருந்து வெறும் 40 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர அமைப்பாகும். ஆம், நமது சூரியனில் இருந்து, மிகக் குறைந்த இடைவெளியில் இந்த நட்சத்திர அமைப்பு அமைந்துள்ளது. இதில் 7 எக்சோபிளானட்கள் இருந்தாலும், விஞ்ஞானிகளின் பார்வை டிராபிஸ்ட்-1பி (TRAPPIST-1b) என்ற கிரகத்தின் மீது தான் பதிந்தது.

காரணம், இது பூமி போன்ற கிரகமாகக் காட்சியளிக்கிறது என்றும், இது 1.4 மடங்கு நமது பூமியை விட பெரியதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. TRAPPIST அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகமும் இது தான். இது பூமி போன்ற கிரகமாக உயிர்களை ஆதரிக்கக்கூடியதாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், சமீபத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் கைப்பற்றிய தகவல் ஆராய்ச்சியாளர்களுக்கு வெறும் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது.
விண்வெளி ஆய்வு கணிக்க முடியாத ஒன்று என்பது இப்போது தெளிவாகியுள்ளது. பெரும்பாலும், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் போன்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன், பிரபஞ்சத்தின் பிரமிக்க வைக்கும் தகவல்களை நாம் இதுவரை அறிந்திருக்கிறோம். TRAPPIST-1b பூமியைப் போன்ற ஒரு கிரகமாக இருக்குமென்று நம்பப்பட்டது, ஆனால், James Webb Space Telescope தகவல், இந்த கிரகத்தில் வளிமண்டலம் இல்லை என்பதை நமக்குக் காண்பித்துள்ளது.

TRAPPIST-1 எனப்படும் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் TRAPPIST-1b கோளுக்கு வளிமண்டலம் இல்லை என்று ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்த கிரகத்தின் எந்த வகையான உயிரினங்களையும் ஆதரிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவும் விஞ்ஞானிகள் முன்னர் சந்தேகித்த ஒன்று தான் என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், ஏன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. காரணம், TRAPPIST-1 நட்சத்திர அமைப்பில் பூமியைப் போன்ற மேலும் ஆறு புறக்கோள்கள் உள்ளன.
TRAPPIST-1b முதல் கிரகம் இந்த அமைப்பின் முதல் கிரகமாகும். இது அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதனால், இதில் வெப்பம் 230 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறதாம். இதனால், இது வளிமண்டலம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நட்சத்திர அமைப்பில் உள்ள மற்ற 6 கோள்களும் அதன் நட்சத்திரத்தில் இருந்து தொலைவில் அமைந்துள்ளது. ஆகையால், அதில் உயிர்களை ஆதரிக்கிற வளிமண்டலம் உள்ளதா என்று சோதனையை அடுத்து மேற்கொள்ளவுள்ளனர்.

TRAPPIST-1b எக்ஸோபிளானட்டிற்கும், அதன் மைய நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரம் நமது சூரியனுக்கும் உள்கோளான புதனுக்கும் இடையிலான தூரத்தை விட 40 மடங்கு குறைவாக உள்ளது. நமது பூமி, சூரியனிடமிருந்து பெறுவதை விட ஐந்து மடங்கு அதிக சூரிய ஒளியைப் இக்கோள் பெறுகிறது. எனவே இதில் உயிர்கள் வாழக்கூடியதாக இருக்க முடியாது என்று வானியலாளர்கள் ஓரளவு உறுதியாகவிட்டனர்.
இதே நட்சத்திர அமைப்பில், குறைந்தபட்சம் மூன்று கிரகங்கள் பூமி போல உள்ளதாம். அதில் TRAPPIST-1e, 1f, மற்றும் 1g போன்றவை இடம்பெறுகிறது. இவை திரவ மேற்பரப்பு நீரின் இருப்புக்கான சரியான நிலைமைகளையும், அதையொட்டி, சில வகையான உயிர்களை வழங்குவதற்கான நிலைமைகளையும் கொண்டிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதற்கான முக்கிய காரணம் இவை அனைத்தும், அதன் நட்சத்திரத்தில் இருந்து சரியான தூரத்தில் அமைத்துள்ளது.
நமது பூமி எப்படி நம்முடைய சூரியனில் இருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கிறதோ, அதே போல இந்த 3 கிரகங்களின் இடைவெளியும் அதன் நட்சத்திரத்தில் இருந்து சரியான வெப்பத்துடன் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், இந்த எக்ஸோபிளானட்களில் உயிர்களை ஆதரிக்கக்கூடிய அமைப்பு நிச்சயம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








