மெயின் பிக்சரைப் பார்க்கலையே.. ஒரே மாதத்தில் 606% வளர்ச்சி.. ட்விட்டருக்கு விபூதி அடிக்க பார்க்கும் Bluesky
உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் நிறுவத்துக்கு புதிய சிஇஓவை (Twitter New CEO) நியமித்த அதே வேளையில், ட்விட்டருக்கு மாற்றாக களமிறங்கிய ப்ளூஸ்கை (Bluesky) ஆப் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. வெறும் ஒரே மாதத்தில் 606 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது புதிய சிஇஓவுக்கு மிகப்பெரும் சவாலாக அமைய வாய்ப்புள்ளது.
இப்படியே போனால், அடுத்த சில மாதங்களில் ட்விட்டருக்கு என்னவாகும் தெரியுமா? இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. எலான் மஸ்க் 2022ஆம் ஆண்டில், ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை வாங்கினார். அதற்காக ரூ.3.30 லட்சம் கோடிகளை செலவு செய்தார். இவ்வளவு செலவு செய்து வாங்கப்பட்ட ட்விட்டரில், எலான் மஸ்க்குக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்பது உண்மை.

இதனாலேயே, லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரது பல முடிவுகள் ட்விட்டர் வாசிகளிடையே மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடையேயும் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் முக்கிய ட்விட்டர் நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டது. ப்ளூ டிக்கிற்கு மாதாந்திர கட்டணம் விதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட பிரபலங்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டது.
இவர்கள் மதாந்திர சந்தா கட்டவில்லை என்பதால் பறிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இப்படி பல அதிருப்தி சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் அதிருப்தி அடைந்து தங்களது சந்தாவை ரத்து செய்தனர். இப்படி மெல்ல மெல்ல பாதிக்குப்பாதி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் காலியாகினர். அதேபோல யூசர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே சென்றது. பலர் ட்விட்டருக்கு மாற்றாக இருக்கும் ப்ளூஸ்கைக்கு திரும்பினர்.
இதனால் சில மாதங்களிலேயே ப்ளூஸ்கை அதீத வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த ஆப்-பை ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான ஜாக் டோர்ஸி (Jack Dorsey) அறிமுகப்படுத்தியது என்ற ஒரே காரணத்தால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ப்ளூஸ்கைக்கு மாறிவருகின்றனர். ட்விட்டரை போலல்லாமல், ப்ளூஸ்கையில் தனியுரிமை கொள்கைகள் மிகவும் சிறப்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ப்ளூஸ்கை ஆப்-பை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பதிவிடும் கருத்துகளை நிறுவனமே நினைத்தாலும் நீக்க முடியாது. அதேபோல உங்களது அக்கவுண்ட்டை முடக்க முடியாது. இப்படி பல சிறப்புகள் உள்ளதால் நாளுக்கு நாள் டவுன்லோட் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6,28,000 பேர் ப்ளூஸ்கை ஆப்-பை டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அளவு மார்ச் மாதத்தை விட 606 சதவிகிதம் அதிகமாகும். இது வரும் மாதங்களில் கோடிகளை எட்ட வாய்ப்புள்ளது. இது எலான் மஸ்க்குக்கு கலக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், புதிதாக சிஇஓவாக பதவியேற்க உள்ள லிண்டா யாக்கரினோவுக்கு (Linda Yaccarino) கட்டாயம் கலக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே வரும் மாதங்களில் ட்விட்டருக்கும், ப்ளூஸ்கைக்கும் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
புளூஸ்கை ஆப்பை எப்படி பெறுவது?: இந்த புளூஸ்கை ஆப் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆப்பை ஏற்கனவே பயன்படுத்திவருவோர், உங்களுக்கு இன்வைட் லிங்க் அனுப்பினால் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். இருப்பினும், ப்ளூஸ்கையின் (https://blueskyweb.xyz/) இணையதளத்துக்கு சென்று ஆப்பை பெற விண்ணப்பிக்கலாம்.
முதலில் அந்த இணையப்பக்கத்துக்கு சென்று Bluesky private beta என்னும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ஜாய்ன் வெயிட்லிஸ்ட் (Join Waitlist) டேப் தோன்றும். அதில், உங்களது மெயில் ஐடியை டைப் செய்தால் விண்ணப்பம் பெறப்பட்டுவிடும். இதையடுத்து ஆப்புக்கான லிங்க் வரும்வரை காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








