ஜூன் 15 வரை யாரும் ITR Filing செய்ய வேண்டாம்.. உங்களுக்கே வினை ஆகிடும்.. அப்டேட் ஆகல.. Tax நிபுணர் எச்சரிக்கை!
பெரும்பாலான தனிநபர் வரி செலுத்துவோருக்கு, நிதியாண்டு 2025-26 (அதாவது மதிப்பீட்டு ஆண்டு 2026-27) க்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2026 ஆகும். வருமான வரி இணையதளம் ஆனது தொழில்நுட்ப ரீதியாக ஏப்ரல் 1 அன்று திறக்கப்பட்டாலும், பின்தள அமைப்புகள் மற்றும் படிவங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்ட பின்னரே உண்மையான ரிட்டர்ன் ஃபைலிங் தொடங்குகிறது.
இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் நடுப்பகுதியில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் செயல்பாடு வேகம் பெறுகிறது. முன்கூட்டியே ஐடிஆர் ஃபைல் செய்வது ஒரு நல்ல நடைமுறையாக கருதப்பட்டாலும், ஜூன் 15 அம தேதிக்கு முன்னர் அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் (ITR Filing) அவசரம் காட்டவேண்டாம் என்று வரி நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஏனென்றால் தாக்கல் பருவத்தின் ஆரம்ப வாரங்களில், சில வரி ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் (Tax documents and statements) இன்னும் புதுப்பிக்கப்பட்டு கொண்டிருக்கலாம். இந்த புதுப்பிக்கப்பட்ட விவரங்களை (updated details) நீங்கள் தவறவிட்டால், உங்கள் வருமான வரித் தாக்கல் தவறானது என குறிக்கப்படலாம்.
ஜூன் மாத நடுப்பகுதியில் என்னென்ன தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன? டிடிஎஸ் (TDS) விவரங்கள், வட்டி வருமானம் மற்றும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் (high value transactions reporting) குறித்த அறிக்கைகள் பொதுவாக மே 31 ஆம் தேதிக்குள் எம்பிளாயர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பதிவேற்றப்படுகின்றன.
ஆனால், படிவம் 26ஏஎஸ், ஏஐஎஸ் மற்றும் டிஐஎஸ் ஆகியவற்றில் அவை முழுமையாக பிரதிபலிக்கவும், சரியான நிலவரத்தை மதிப்பிடவும் மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று இஒய் (EY) நிறுவனத்தின் வரி உத்தி நிபுணரும், முன்னாள் மூத்த வரி மேலாளருமான நிஷாந்த் ஷங்கர் கூறுகிறார்.
"மற்றொரு நடைமுறைச் சிக்கல் என்னவென்றால், நிதி நிறுவனங்களும், எம்பிளாயர்களும் பின்னர் தங்கள் தாக்கல் விவரங்களை திருத்தலாம் அல்லது சரிசெய்யலாம். பல சந்தர்ப்பங்களில், திருத்தப்பட்ட டிடிஎஸ் அறிக்கைகள், சரிசெய்யப்பட்ட வட்டி அறிக்கை அல்லது புதுப்பிக்கப்பட்ட பத்திர பரிவர்த்தனை தரவுகள் ஆகியவை ஆரம்ப பதிவேற்றத்திற்கு பிறகே கணினி அமைப்புக்குள் வருகின்றன," என்றும் அவர் கூறியுள்ளார்
இதன் விளைவாக, முன்கூட்டியே தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர் முழுமையற்ற வருமானத்தை பதிவு செய்யவோ அல்லது தவறான டிடிஎஸ் வரவுகளை கோரவோ நேரிடலாம். இது பின்னர் பொருந்தாத அறிவிப்புகள், பணத்தை திரும்பப் பெறுவதில் தாமதம் அல்லது திருத்தப்பட்ட அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டிய தேவையை தூண்டக்கூடும்.
யார் வருமான வரி அறிக்கையை முன்கூட்டியே தாக்கல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்? நிஷாந்த் ஷங்கரின் கூற்றுப்படி, மூலதன ஆதாயங்கள், பல வங்கி கணக்குகள், வெளிநாட்டு சொத்துக்கள், வணிக வருமானம் அல்லது கணிசமான நிதி பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர்கள் முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வதை தவிர்ப்பது நல்லது. அத்தகைய வரி செலுத்துவோருக்கு, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு ஏஐஎஸ், படிவம் 26ஏஎஸ், படிவம் 16 / படிவம் 16ஏ மற்றும் பிற பரிவர்த்தனை பதிவுகளைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானதாகிறது.
வழக்கமாக ஜூன் மாத நடுப்பகுதிக்குள் முழுமையாக புதுப்பிக்கப்படும் முக்கியமான தரவுகளின் பட்டியல் இதோ:
- படிவம் 26ஏஎஸ் இல் உள்ள டிடிஎஸ் பதிவுகள்
- ஏஐஎஸ் (ஆண்டுத் தகவல் அறிக்கை) புதுப்பிப்புகள்
- எஸ்எப்டி (நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கை) அறிக்கையிடல்
- வங்கி வட்டி அறிக்கையிடல்
- டிவைடென்ட் வருமான அறிக்கையிடல்
- பரஸ்பர நிதி மற்றும் பங்கு பரிவர்த்தனை அறிக்கையிடல்
- பணியமர்த்தியவர்களால் திருத்தப்பட்ட டிடிஎஸ் வருமான அறிக்கைகள் அல்லது பிடித்தங்கள்
"இன்று, வருமான வரி ஆய்வு பெரும்பாலும் கணினி அமைப்பை சார்ந்தே உள்ளது. வருமான வரி அறிக்கையில் (ITR) தெரிவிக்கப்பட்ட வருமானம், பின்னர் புதுப்பிக்கப்படும் ஏஐஎஸ், படிவம் 26ஏஎஸ் அல்லது எஸ்எப்டி தரவுகளுடன் பொருந்தவில்லை என்றால், கணினி அமைப்பு அந்த வருமான அறிக்கையை தவறானதாக குறிக்கலாம்" என்றும் நிஷாந்த் ஷங்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications