31 ஆம் தேதி கெடு.. மிஸ் ஆச்சுன்னா வருமானத்தை பொறுத்து ரூ.5000 முதல் அபராதம்.. ITR Filing-ல் இதை விட்றாதீங்க!
வருமான வரித்துறை படி, ரெசிடெண்ட் (Resident) என தகுதிபெறும் வரி செலுத்துவோர், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்கள் வருமான வரி அறிக்கையை (ITR Filing 2026) தாக்கல் செய்யும்போது, வெளிநாட்டில் உள்ள தங்கள் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த விவரங்கள் 'Schedule FA' (வெளிநாட்டுச் சொத்துகள்) மற்றும் 'Schedule FSI' (வெளிநாட்டு மூல வருமானம்) ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். வரி செலுத்துவோர் இத்தகவலை துல்லியமாக தெரிவிக்கத் தவறினால், அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். இத்தகைய வருமானம் மற்றும் சொத்துகளை வெளிப்படுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு சொத்துகள் குறித்த விவரங்களை யார் தெரிவிக்க வேண்டும்? வருமான வரிச் சட்டத்தின்படி, 'வசிப்பவர் மற்றும் வழக்கமாக வசிப்பவர்' (Resident and Ordinarily Resident) என தகுதிபெறும் இந்திய வசிப்பாளர்கள், தங்கள் வரி அறிக்கையில் வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானம் குறித்த விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
ஐடிஆர் தாக்கல் செய்யும்போது, வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கு அல்லது வெளிநாட்டில் உள்ள கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரம் (signing authority) குறித்த விவரங்களை வரி செலுத்துவோர் குறிப்பிட வேண்டும். கிளியர்டேக்ஸ்-ன் (Cleartax) சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, இத்தகைய நபர்கள் ரியல் எஸ்டேட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது வேறு ஏதேனும் பைனான்ஷியல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (financial instruments) செய்துள்ள முதலீடுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டுச் சொத்துகளை பற்றிய விவரங்களை அறிவிப்பதற்கான காலக்கெடு என்ன? வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானம் குறித்த விவரங்களை வெளிப்படுத்த வேண்டியிருப்பதால், இதற்கான காலக்கெடுவும் வழக்கமான வருமான வரி தாக்கல் செய்யும் தேதியுடனேயே இணைக்கப்பட்டுள்ளது.
தணிக்கை (Audit) தேவைப்படாத பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அந்தந்த மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 ஆம் தேதி ஆகும். இருப்பினும், உங்கள் வெளிநாட்டு சொத்துகள் தவறாக அறிவிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அறிவிக்கப்படாமலே இருந்தாலோ, அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட கணக்கை (revised return) தாக்கல் செய்யலாம்.
முன்பு, இதற்கான காலக்கெடுவானது அந்தந்த மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 அல்லது வருமான வரித் துறை மதிப்பீட்டை முடிப்பதற்கு முந்தைய தேதி - இதில் எது முந்தையதோ அதுவாக இருந்தது. ஆனால், சமீபத்திய கொள்கை மாற்றங்கள் இந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளன, இதனால் வரி செலுத்துவோர் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள கூடுதல் அவகாசம் கிடைக்கிறது.
உதாரணமாக, 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை இந்த ஆண்டு ஜூலை 15 அன்று தாக்கல் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் செப்டம்பர் மாதத்தில், உங்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் குறித்த விவரங்களை அறிவிக்க தவறியதை உணர்கிறீர்கள் என்றால், 2027 மார்ச் 31 வரை நீங்கள் திருத்தப்பட்ட கணக்கை எளிதாக தாக்கல் செய்யலாம்.
வருமான வரித் துறை அதை கண்டறிந்து சுட்டிக்காட்டும் வரை காத்திருப்பதை விட, தவறுகளை திருத்திக்கொள்ள இதுவே சிறந்த வழியாகும். திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, வரி செலுத்துவோர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்பதுதான்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அசல் வருமான வரி கணக்கை நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால், அது காலம் கடந்த கணக்கு (belated return) என கருதப்படும்; இதற்கு தனிப்பட்ட விதிகளின் கீழ் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். அந்தந்த மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் காலம் கடந்த கணக்கை தாக்கல் செய்யும் ஒரு நபருக்கு, அவர்களின் வருமானத்தை பொறுத்து ரூ.5000 இல் இருந்து அபராதம் விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications