IT ஊழியரையே தூக்கி சாப்பிட்ட சைபர் கிரைம் கும்பல்.. கண்ணை மறைத்த கனவு!
பெங்களூருவில் புதிய வேலை கிடைத்ததால் அங்கு சென்று வாழ்க்கை தொடங்க திட்டமிட்ட ஐடி (IT) ஊழியரிடம், சைபர் கிரைம் கும்பலொன்று மிகவும் நூதனமாக 1.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் ஊழியரிடமே, கைவரிசை காட்டிய கும்பல், அவரை எப்படி ஏமாற்றியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை தொடர்ந்து மாறிவருகிறது. பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் டிஜிட்டலாகிவிட்டது. இதனால் சைபர் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. சொல்லப்போனால், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் நாள்தோறும் புதுப்புது திட்டங்களை தீட்டி, மக்களிடம் பணத்தை பறித்து வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், வங்கி ஊழியர்கள் போல பேசி எஸ்எம்எஸ் அல்லது கால் மூலம், ஒருவரது வங்கி விவரங்களை தெரிந்துகொண்டு அதன் மூலம் சைபர் கும்பல் பணத்தை பறித்து வந்தது. இதனை அறிந்துகொண்ட மத்திய, மாநில அரசுகள் மற்றும் வங்கி நிறுவனங்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, அதுபோன்ற குற்றங்களை குறைந்துவிட்டது.
இருப்பினும், சைபர் கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் பகுதி நேர வேலைக்கு ஆள்கள் தேவையென்று விளம்பரம் செய்து மக்களின் ஆசையை தூண்டி பணத்தை பறிப்பது, போலியான சமூக ஊடக கணக்கை தொடங்கி "ஆப்ரேஷனுக்கு பணம் தேவை" என்று விளம்பரம் செய்து மக்களின் கருணை மனபான்மை மூலம் பணத்தை பறிப்பது என்று புதுப்புது வழிகளுக்கு மாறிவருகின்றனர்.
இப்போது ஆன்லைனில் வீடு தேடுவோரை குறி வைத்தும் பணத்தை பறிக்க ஆரம்பித்துவிட்டனர். கொல்கத்தாவை சேர்ந்த 25 வயதான ஐடி ஊழியருக்கு பெங்களூருவின் மராத்தஹள்ளி உள்ள மிகப்பெரும் ஐடி நிறுவனத்தில் புதிய வேலை கிடைத்துள்ளது. இவர் ஜூன் 1ஆம் தேதி அங்கு பணியில் சேர வேண்டும் என்பதால், கொல்கத்தாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் மராத்தஹள்ளியில் வீடு தேடிகொண்டிருந்தார்.
அந்த வகையில், நோபுரோக்கர் (NoBroker) ஆப்-பில் அவரது பட்ஜெட்டுக்கு ஏற்றதுபோல ஒரு வாடகை பிளாட்டை பார்த்துள்ளார். உடனே, அதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு கால் செய்து விவரங்களை கேட்கத் தொடங்கினார். அதன்பின் ரூ.1.6 லட்சம் பணத்தை இழந்தார். இதுகுறித்து அந்த ஐடி ஊழியர் கூறுகையில், "நான் நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தேன்.
எனது காதலி உடன் ஒரு புதிய வாழ்க்கையை பெங்களூருவில் தொடங்க திட்டமிட்டிருந்தேன். எங்களுக்கு வீடு தேவைப்பட்டது. நோபுரோக்கர் மூலம் மாரத்தஹள்ளியில் கவர்ச்சிகரமான பிளாட் இருப்பதை பார்த்தேன். அவர்களை தொடர்பு கொண்டபோது, எதிரே தன்னை ராணுவ அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் பேசினார். மாத வாடகை ரூ. 25,000, முன்பணம் ரூ.1.6 லட்சம் எனத் தெரிவித்தார்.
அதோடு தான் மும்பையில் இருப்பதாகவும் பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பு கட்டடத்தின் மேலாளரிடம் பேசிக்கொள்ளுமாறும் ஒரு நம்பரை என்னிடம் கொடுத்தார். அந்த நம்பருக்கு கால் செய்தேன், எதிரே பேசிய நபர், உங்களுக்கு வீட்டை உறுதி செய்ய ரூ. 4,000 பணத்தை அளிக்குமாறு தெரிவித்தார். நானும் கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தேன்.
அதன்பின் பிளாட்டை பற்றி பேசி முடித்தேன். முன்பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினார்கள். நானும் கூகுள் பே மூலம் 8 தவணைகளாக ரூ.1.6 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டேன். அதன்பின் சில நாட்களுக்கு பிறகு அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டேன். அவர்களது, போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நான் பணத்தை இழந்ததை அப்போதுதான் உணர்ந்தேன்.
நோபுரோக்கர் ஆப் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு நடந்ததை விளக்கினேன். உடனே அந்த பிளாட்டின் விளம்பரம் ஆப்-பில் இருந்து நீக்கப்பட்டது. பிளாட்டை நேரில் சென்று பார்க்காமல் பணத்தை கொடுத்தது மிகவும் தவறானது. இதற்கும் நோபுரோக்கர் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இப்போது நான் பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








