திறமையான சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த ஐடி நிறுவனம்.!
இந்தியாவில் ஐடி துறையானது, முதன்மை துறைகளில் ஒன்றாக உள்ளது. அதிலும் கொரோனா காலகட்டத்திலும் கூட நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது என்று தான் கூறவேண்டும்.

இப்போது நெருக்கடியான காலகட்டத்திலும் இந்த ஐடி துறையானது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் கூட ஐடி துறையின் தேவையானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதாவது ஐடி நிறுவனங்களுக்கு பல புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பல ஐடி நிறுவனங்கள் தற்போது சம்பள உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டிசிஎஸ், அசெஞ்சர் போன்ற பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தன.

இதேபோல் மிகவும் கடுமையாக உழைத்த ஊழியர் ஒருவருக்கு ஐடி நிறுவனம் கொடுத்த ஒரு பரிசு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். அதாவது பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் இப்தேகர் ரஹ்மானி ஆவார். இவர் தனது பள்ளிப்படிப்பை பெனிபூரில் முடித்த பின்பு இன்ஜினீயராக வேண்டும் என கனவு இருந்துள்ளது.

எனவே உதய்பூரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்துள்ளார். அதன்பின்பு நொய்டாவில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ரஹ்மானிக்கு Software Developer வேலை கிடைத்துள்ளது. குறிப்பாக ரஹ்மானி நல்ல திறமையாக வேலை செய்யக்கூடியவர் என்று கூறப்படுகிறது.

அண்மையில் ரஹ்மானி அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு ஒரு சாஃப்ட்வேர் டெவலப் செய்து கொடுத்துள்ளார். அந்த நிறுவனத்திற்கு இவர் செய்த வேலை மிகவும் பிடித்துப்போகவே, ரஹ்மானிக்கு மறக்க முடியாத ஒரு பரிசு கொடுக்க நினைத்துள்ளது.

எனவே நிலவில் ரஹ்மானியின் பெயரில் 1 ஏக்கர் இடம் வாங்கி அவருக்கு பரிசாக கொடுத்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன ரஹ்மானி, தனது தாய் நஸ்ரா பேகமிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

பின்பு நஸ்ரா பேகம் தனது குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கடுமையாக உழைத்த ஊழியருக்கு ஐடி நிறுவனம் நிலவில் இடம் வாங்கிக் கொடுத்த சம்பவம் இதுவே முதல்முறை ஆகும்.


Click it and Unblock the Notifications