வெற்றிகரமாக 10 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-49!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அதிநவீன இஓஎஸ்-01 செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 3.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 10 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இஓஎஸ்-01 செயற்கைகோள்
இதில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 செயற்கைகோள் முதன்மையாக பொருத்தப்பட்டுள்ளது. இது விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு உள்ளிட்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளாக இருக்கும்.

மொத்தமாக 10 செயற்கைகோள்கள்
அதோடு லிதுவேனியா நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப சம்பந்தமான ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்கள், லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த கடல்சார் பயன்பாடுக்கு 4 செயற்கைகோள்கள் என மொத்தமாக 10 செயற்கைகோள்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
3.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-49
பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டன் நேற்றுத் தொடங்கப்பட்டது. 26 மணிநேர கவுண்டனுக்கு பிறகு 3.02 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் மழைப் பொழிவு காரணமாக 10 நிமிடம் தாமதாக 3.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ டுவிட்டர் பக்கம்
கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவதலை காண பார்வையாளர்கள் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை அனைவரும் காணும் வகையில் இஸ்ரோ டுவிட்டர் பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ராக்கெட் மற்றும் செயற்கைகோள் செயல்பாடுகள்
பிஎஸ்எல்வி சி-49 இந்தியாவின் 51-வது பிஎஸ்எல்வி ராக்கெட்டாகும். ராக்கெட் மற்றும் செயற்கைகோள் செயல்பாடுகள் அனைத்தையும் விஞ்ஞானிகள் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து பருவநிலையிலும் படங்கள்
ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 செயற்கைகோளில் இருக்கும் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும்.
இந்தாண்டின் முதல் செயற்கைகோள்
கொரோனா தொற்று காரணமாக இஸ்ரோ இந்த ஆண்டு திட்டமிட்ட எந்தவித செயற்கைகோளையும் விண்ணில் செலுத்தவில்லை. இந்தாண்டின் முதல் செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள்
பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து இஓஎஸ்-01 செயற்கைகோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு புவிநீள்வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதேபோல மீதமுள்ள 9 செயற்கைகோளும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications