மூக்கு மேல விரல் வச்ச NASA.. ISRO-வின் Trishna மிஷன்!
இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (Indian Space Research Organization), மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்றை கையாளும் புதிய மிஷனின் காலடி எடுத்து வைத்துள்ளது. அதுதான் த்ரிஷ்னா மிஷன் (Trishna Mission). 770 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை உள்ளடக்கிய இந்த த்ரிஷ்னா மிஷனின் நோக்கம் என்ன? இது எப்போது விண்ணில் செலுத்தப்படும்? விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் என்னென்ன வேலைகளை செய்யும்? இதெப்படி உலகை காப்பாற்றும்? இதோ விவரங்கள்:
அதென்ன மிஷன்? மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய மற்றும் இதற்கும் முன் நாம் கண்டிராத காலநிலை சவால்களை சமாளிக்க உதவும் உயர்தர தரவுகளை சேகரிக்கும் நோக்கத்தின்கீழ் தயாராகும் ஸ்பேஸ் மிஷன் தான் த்ரிஷ்னா. இது காலநிலை மாற்றத்தை கண்காணிக்கவும், தணிக்கவும் உலகளாவிய முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கவும்.. பிரெஞ்சு விண்வெளி ஏஜென்சி ஆன சிஎன்இஎஸ் (CNES) உடன் இணைந்து இஸ்ரோ செய்யும் ஒரு கூட்டு ஸ்பேஸ்-மிஷன் ஆகும்.

த்ரிஷ்னா என்பதன் விரிவாக்கம் என்ன? தெர்மல் இன்ப்ராரெட் இமேஜிங் சாட்டிலைட் ஃபார் ஹை-ரெசல்யூஷன் நேச்சுரல் ரிசோர்ஸ் அசெஸ்மென்ட் (Thermal infraRed Imaging Satellite for High-resolution Natural resource Assessment) என்பதன் சுருக்கமே த்ரிஷ்னா ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது உயர் தெளிவுத்திறன் கொண்ட இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும்.
770 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 761 கிமீ உயரத்தில் உள்ள சூரியன் ஒத்திசைவான சுற்றுப்பாதையில், இரண்டு அதிநவீன இமேஜிங் பேலோடுகளை சுமந்து செல்லும். ஒன்று - சிஎன்இஎஸ் ஆல் உருவாக்கப்பட்ட வெப்ப அகச்சிவப்பு கருவி. இது நான்கு வெப்ப பட்டைகள் முழுவதும் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உமிழ்வுகளை வரைபடமாக்கும்.
மற்றொன்று - இஸ்ரோவின் விசிபிள்-ஷார்ட்வேவ் இன்ஃப்ராரெட் (VSWIR) சென்சார் ஆகும். இது தாவரங்களைக் கண்காணிப்பதற்காக 7 ஸ்பெக்ட்ரல் பேண்டுகளில் உள்ள அவதானிப்புகளை செய்யும். இவ்விரண்டும், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை (Earth's surface temperature), தாவர ஆரோக்கியம் (vegetation health) மற்றும் நீர் சுழற்சி இயக்கவியல் (water cycle dynamics) ஆகியவற்றின் ஹை ஸ்பாட்டியல் மற்றும் டெம்போரல் ரெசல்யூஷன் (High spatial and temporal resolution) கண்காணிப்புகளை நிகக்தும்.
இதேபோன்ற மற்ற செயற்கைகோள்களுக்கும் த்ரிஷ்னாவிற்கும் என்ன வித்தியாசம்? த்ரிஷ்னாவை வேறுபடுத்துவது அதன் தனித்தன்மையான ஹை ஸ்பாட்டியல் ரெசல்யூஷன் ( அதாவது நிலம் / கடற்கரைக்கு 57மீ, கடல் / துருவப்பகுதிக்கு 1கிமீ) என்கிற ரெசல்யூஷன் தான்.கூடவே த்ரிஷ்னாவில் இன்னொரு சிற்பபம்சமும் உள்ளது. அது 2 - 3 நாட்கள் என்கிற அளவில் அடிக்கடி மீண்டும் பார்வையிடும் நேரம் (Frequent revisit time) ஆகும்.
இஸ்ரோ-சிஎன்இஎஸ் கூட்டணியில் உருவாகும் த்ரிஷ்னா சாட்டிலைட் ஆனது - காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கும், நீர் போன்ற விலைமதிப்பற்ற இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவளிப்பதற்கும் விண்வெளி அடிப்படையிலான வெப்ப அகச்சிவப்பு இமேஜிங்கை பயன்படுத்துவதில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்
ஏனென்றால் த்ரிஷ்னா சாட்டிலைட் ஆனது மேற்பரப்பு வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதம், ஆவியாதல் விகிதங்கள் மற்றும் தாவர சுகாதார குறிகாட்டிகள் போன்ற முக்கிய காலநிலை மாறுபாடுகளை முன்னோடியில்லாத வகையில் கண்காணிக்க உதவும். விவசாயத்தில் - இது நீர்ப்பாசனத்தை மேம்படுத்தவும், பயிர் உற்பத்தியை மேம்படுத்தவும், நிலையான நீர் மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்தவும் உதவும். அதே நேரத்தில் நீர் வள மேலாளர்கள் - ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலோர பகுதிகளில் மாசுபடுவதைக் கண்காணிக்க முடியும்.
காட்டுத் தீ மற்றும் எரிமலை செயல்பாடுகளை கண்டறிவதன் மூலம் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்கும் இந்த மிஷன் துணைபுரியும். ஆவியாதல், பனி/பனிப்பாறை இயக்கவியல், மற்றும் நிரந்தர பனிப்பொழிவு மாற்றங்கள் போன்ற முக்கிய காலநிலை மாற்றங்கள் குறித்த த்ரிஷ்னாவின் அளவீடுகள் ஆனது காலநிலை மாதிரிகளை மேம்படுத்தவும் உதவும்.
த்ரிஷ்னா சாட்டிலைட் எப்போது விண்ணில் பாயும்? த்ரிஷ்னா மிஷன் குறித்த விவரங்களை இஸ்ரோ வெளியிட்டாலும் கூட, இந்த மிஷனின் லான்ச் டைம்லைன் குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இது 2025 ஆம் ஆண்டு வாக்கில் விண்ணில் செலுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல் வெளியானால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








