ISRO-னா சும்மாவா.. வச்ச குறி தப்புமா! பாய்ந்தது PSLV-C58.. XPoSat-ன் பிளாக் ஹோல் வேட்டை ஆரம்பம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) இன்று காலை, அதாவது 2024 ஜனவரி 1 ஆம் தேதி காலை, இந்தியாவின் முதல் எக்ஸ்-ரே பொலரிமீட்டர் சாட்டிலைட் (X-ray Polarimeter Satellite) ஆன எக்ஸ்போசாட் ((XPoSat) செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
சரியாக காலை 9:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இஸ்ரோவின எக்ஸ்போசாட் ஆனது அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் (Designated orbit) திறம்பட நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியின் மேற்பரப்பில் இருந்து 6-டிகிரி சாய்வில் 650 கிலோ மீட்டருக்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 உட்பட கடந்த 2023 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சில வெற்றிகரமான ஸ்பேஸ் மிஷன்களை தொடர்ந்து இந்தியாவின் முதல் எக்ஸ்-ரே பொலரிமீட்டர் சாட்டிலைட்டும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ்எல்வி என்று சுருக்கமாக அழைக்கப்படும் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (Polar Satellite Launch Vehicle) மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் எக்ஸ்போசாட் ஆனது 2 அதிநவீன அறிவியல் பேலோடுகளை சுமந்து சென்றுள்ளது. இந்த செயற்கைகோளின் முதன்மை பேலோட் போலிக்ஸ் (POLIX - Polarimeter Instrument in X-rays); இரண்டாவது பேலோட் - எக்ஸ்பெக்ட் (XSPECT - X-Ray Spectroscopy and Timing) ஆகும்.

இவ்விரண்டு பேலோடுகளும் சேர்ந்து நமது பிரபஞ்சத்தின் மிகவும் புதிரான விண்வெளி மர்மங்களில் ஒன்றான பிளாக் ஹோல்கள் (Black holes), அதாவது கருந்துளைகளில் இருந்து வெளிப்படும் சிக்கலான உமிழ்வு வழிமுறைகளை (Complex emission mechanisms) ஆய்வு செய்யவும், அவற்றை புரிந்துகொள்ளவும் உதவ உள்ளன.
பிளாக் ஹோல்கள் மட்டுமின்றி இஸ்ரோவின் எக்போசாட் செயற்கைகோள் ஆனது நியூட்ரான் நட்சத்திரங்கள் (Neutron stars), செயலில் உள்ள விண்மீன் கருக்கள் (Active galactic nuclei) மற்றும் பல்சர் விண்ட் நெபுலாக்கள் (Pulsar wind nebulae) போன்ற வானியல் மூலங்களின் சிக்கலான உமிழ்வு வழிமுறைகளையும் ஆய்வு செய்ய உள்ளது.

காலம் காலமான இந்த உமிழ்வுகளின் சரியான தன்மையை புரிந்துகொள்வது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. இஸ்ரோவின் எக்ஸ்போசாட் ஆனது துருவமுனை அளவீடுகளை அறிமுகப்படுத்தி, துருவமுனைப்பின் அளவு மற்றும் கோணத்தின் வடிவத்தில் கூடுதல் பரிமாணங்களை வழங்குவதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த செயற்கைகோளின் வழியாக பல்வேறு கண்காணிப்பகங்களில் இருந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மற்றும் டைமிங் (Spectroscopic and Timing) டேட்டா போன்ற மதிப்புமிக்க நுண்ணறிவுகளும் இந்தியாவிற்கு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பிளாக் ஹோல்கள் மற்றும் எக்ஸ்-கதிர்களை வெளியிடும் பிற வானியல் மூலங்கள் தொடர்பான அடுத்தகட்ட ஆராய்ச்சியை இஸ்ரோ முன்னெடுக்கும்.


Click it and Unblock the Notifications