சீறிப்பாய்ந்த சிங்கம் GSLV F12 ராக்கெட்.. புதிய சகாப்தத்தில் ISRO.. ஏன் தெரியுமா?
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து என்விஎஸ் 01 (NVS 01) செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி எப் 12 (GSLV F12) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக் கோள் மூலம் இஸ்ரோ (ISRO) புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் நேவிக்ஐசி (NavIC) ரக செயற்கைக் கோளான என்விஎஸ் 01, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) இருந்து ஜிஎஸ்எல்வி எப் 12 ராக்கெட் மூலம் இன்று காலை 10.32 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த என்விஎஸ் 01 செயற்கைக் கோள் பூமியில் இருந்து 251 கிமீ தொலைவில் உள்ள ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (Geosynchronous Transfer Orbit) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து உள்ளிட்ட நேவிகேஷனல் பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பின் உடைய (Indian Regional Navigation Satellite System) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த என்விஎஸ் 01 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சுமார் 2,232 கிலோ எடை கொண்ட என்விஎஸ் 01 செயற்கைக் கோள் தொடர்ந்து 12 ஆண்டுகள் செயல்படக்கூடியது. இந்த செயற்கைக் கோள் முழுக்க முழுக்க உள்நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை (Second Generation) தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்ட நேவிகேஷனல் செயற்கைக் கோள்களை விட என்விஎஸ் 01 துல்லியமாக செயல்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால், நேவிகேஷனல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், காஸ்மிக் கதிர்கள் (Cosmic rays) கண்காணிப்பு, சூரிய வெப்ப நிலை மாறுபாடு (Solar Temperature Variations) உள்ளிட்டவையை கண்காணிக்கவும் என்விஎஸ் 01 செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. அதோடு நாட்டின் அறியப்படாத பகுதிகளையும், என்விஎஸ் 01 செயற்கைக்கோளால் கண்காணிக்க முடியும். முன்னதாக, இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) திட்டத்தின் கீழ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி ஆகிய 7 நேவிகேஷனல் செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.
இந்த செயற்கைக் கோள்களின் ஆயுட்காலம் அடுத்தடுத்து முடிவுக்கு வருவதால், இஸ்ரோ 12 ஆண்டுகள் செயல்படக்கூடிய வகையில் என்விஎஸ் 01 செயற்கைக்கோளை உருவாக்கி விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதன்படியே அட்வான்ஸ் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட என்விஎஸ் 01 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








