Jio தனது 5G சேவையை August 15 ஆம் தேதி துவங்குகிறதா? 10 நாளில் இது சாத்தியமா? மிரட்டும் ஜியோ!
சமீபத்தில் நடைபெற்ற 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் மிகவும் கம்பீரமாகச் செயல்பட்டது. 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில், பெரியளவு 5G அலைக்கற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ தனக்குச் சொந்தமாகியுள்ளது. ஒட்டுமொத்த 5G அலைக்கற்றை ஏலத்தில் விற்ற அணைத்துப் பிரிவிலும் பாதிக்கு மேல் இருக்கும் அலைக்கற்றைகளை ஜியோ (Jio) நிறுவனம் வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மிரட்டல் காட்டிய ரிலையன்ஸ் ஜியோ
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக அலைக்கற்றையை வாங்கி முதல் இடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இடம்பிடித்துள்ளன. 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவர் ஆகாஷ் அம்பானி இந்தியாவில் 5ஜி அறிமுகம் குறித்து சூசகமாக ஒரு துணுக்கை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 5ஜி சேவையை Jio துவங்குமா?
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை, பான்-இந்தியா 5ஜி அறிமுகத்துடன் கொண்டாட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கான பொருள், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஜியோ தனது 5ஜி சேவைகளை இந்தியாவில் கிடைக்கச் செய்யும் என்பதை இது குறிப்பிடுகிறது. இவ்வளவு குறுகிய காலக் கட்டத்திற்குள் 5ஜி சேவையை ஜியோ ரோல் அவுட் செய்ய முடியுமா? என்பது தான் இப்போது அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

ஆகாஷ் அம்பானி சொல்வது சாத்தியம் தானா?
ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15க்கு முன்னதாக 5ஜி சேவையைத் துவங்குமா? இது சாத்தியம் தானா? ஜியோ என்ன முடிவில் இப்படி ஒரு அறிவிப்பை வெளிப்படுத்தியது என்பதைத் தெளிவாக இப்போது தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 5G ஏலத்தில் அதிக ஏலம் எடுத்த நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது. ஏலத்தில் அதிக 5G அலைக்கற்றைகளை வாங்கிய நிறுவனம் இப்போது, நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக 5ஜி சேவைகளை நாட்டில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

5ஜி சேவைக்காக ரூ.80,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ள Jio
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விற்ற அனைத்து அலைக்கற்றைகளிலும் கிட்டத்தட்டப் பாதியை ஜியோ நிறுவனமே கைப்பற்றியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மட்டும் சுமார் ரூ.80,000 கோடிக்கு மேல் செலவழித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏலத்திற்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது, "ஜியோ, பான்-இந்தியா 5ஜி வெளியீட்டுடன் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வெறும் 10 நாட்களில் இது சாத்தியமா?
இவர் கூறுவது உண்மை என்றால், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஜியோ தனது 5ஜி சேவைகளை இந்தியாவில் கிடைக்கச் செய்ய அதிக வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு ஏறக்குறைய வெறும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் 5ஜி சேவையை நாட்டில் அறிமுகம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதைச் சாத்தியம் என்கிறது.

மத்திய அரசு 5ஜி அறிமுகம் அக்டோபர் என்கிறது.. Jio ஆகஸ்ட் என்கிறது.!
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்றும், அக்டோபர் மாதத்திற்குள் 5G சேவைகள் நாட்டில் வெளிவரத் தொடங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சரியாக நடந்தால் இது சாத்தியம்
இதன் படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் ஜியோவிற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில் ஜியோ தனது 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளை குறுகிய காலத்தில் செயல்படுத்தும் முதல் நிறுவனமாக ஜியோ ஒரு முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகாஷ் அம்பானி என்ன சொல்கிறார்?
ஸ்பெக்ட்ரம் கையகப்படுத்தல் குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் அம்பானி என்ன சொல்கிறார்? "நாடு தழுவிய ஃபைபர் இருப்பு, பாரம்பரிய உள்கட்டமைப்பு, ஐபி நெட்வொர்க்கு, உள்நாட்டு 5ஜி ஸ்டேக் மற்றும் தொழில்நுட்பம் முழுவதும் வலுவான உலகளாவிய கூட்டாண்மையுடன் நிறுவனம் குறுகிய காலத்தில் 5G வெளியீட்டிற்கு முழுமையாகத் தயாராக உள்ளது." என்று அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஜியோ கைப்பற்றிய ஸ்பெக்ட்ரம் விபரங்கள்
தொலைத்தொடர்புத் துறை (DoT) நடத்திய 5G ரோல் அவுட் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ எவ்வளவு அலைக்கற்றைகளைக் கைப்பற்றியுள்ளது என்று பார்க்கலாம். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகளில் ஸ்பெக்ட்ரத்தை 20 ஆண்டுகளுக்கு ரூ. 88,078 கோடி என்ற கட்டணத்துடன் வாங்கியுள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா எவ்வளவு கைப்பற்றியது?
நாடு முழுவதும் 5G சேவைகளை வழங்குவதற்கு போதுமான ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இதேபோல், ஜியோவின் போட்டியாளர்கள் எவருக்கும் இல்லாத 700MHz அலைக்கற்றைகளை நிறுவனம் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மறுபுறம், பார்தி ஏர்டெல் 19,867 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தையும், வோடபோன் ஐடியா 2,668 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும் வாங்கியது.

இந்தியாவின் முதல் 5ஜி பயன்பாட்டு சேவைக்கு மக்கள் ரெடியா?
நான்காவது பங்கேற்பாளரான அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் லிமிடெட் மொத்தம் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகளை மட்டுமே வாங்கியுள்ளது. அதானி குழுமம் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் தளவாடங்கள் போன்ற அதன் வணிக பயன்பாட்டிற்கு மட்டுமே ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தும் என்பதனால் இது போதுமானது. எப்படிப் பார்த்தாலும், ஜியோ கூறியுள்ள அறிவிப்பை வைத்து பார்க்கையில், இந்தியாவின் முதல் 5ஜி பயன்பாட்டு சேவை ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து வெளிவர அதிக வாய்ப்புள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications