3 ஸ்டார் AC நல்லதா? இல்லை 5 ஸ்டார் AC நல்லதா? எந்த AC வாங்கினால் பெஸ்ட்? எது கரண்ட் பில்லை குறைக்கும்?
கோடைகாலத்தில் இப்போது அனைவரும் வாங்க ஆசைப்படும் ஒரு சாதனம் என்றால், அது AC தான். என்ன தான் வீட்டில் 3 அல்லது 4 ஃபேன் இருந்தாலும், ஒரு AC இருந்தால் தான் சில்லென்று நிம்மதியாக கோடை காலத்தை கடக்க முடியும்.
AC என்றதும் அனைவரின் மனதிலும் தோன்றும் முதல் விஷயம், இது மிகவும் விலை உயர்ந்தவை ஆகிற்றே.! ஏசி பயன்படுத்தினால், கரண்ட் பில் எகிறிவிடுமே.! வாடகை வீட்டில் ஏசி போட்டால் ஹவுஸ் ஓனர் என்ன சொல்வார்களோ.! என்று பல விதமான எண்ணங்கள் உங்கள் மனிதில் தோன்றி மறையலாம். ஆனால், இதில் கவலைப்பட கூடிய விஷயமாக அனைவரும் பார்ப்பது மின்சார கட்டணம் தான்.

ஏசி பயன்படுத்தினால் மின் கட்டணம் உயரும் என்பது பொதுவான கருத்து. ஆனால், இப்போது சந்தையில் மின்சார கட்டணத்தை குறைக்கும் சிறந்த ஏசி மாடல்கள் எல்லாம் விற்பனைக்கு வந்துவிட்டது. சரியான ஏசி மாடலை தேர்வு செய்தால், மின்சாரக் கட்டணத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் அறையின் அளவு மற்றும் ஏசியின் நட்சத்திர மதிப்பீட்டை வைத்து, உங்களுக்கான் சரியான ஏசி மாடலை தேர்வு செய்ய வேண்டும்.
இன்னும் சிலருக்கு எந்த மாடல் ஏசியை வாங்குவது என்ற குழப்பம் இருக்கிறது. ஏசி வாங்கும் போது பெரும்பாலானோர் குறைந்த விலையில் கிடைக்கும், குறைந்த நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஏசி மாடல்களை வாங்கவே முயல்கின்றனர். இது தான் நாம் செய்யும் முதல் தவறு. காரணம் என்னவென்றால், அதிக ஸ்டார் மதிப்பீடு இருக்கும் ஏசிகள் தான் உங்களுக்கான மின்சார கட்டணத்தை குறைக்கபோகின்றன.
ஸ்டார் மதிப்பீடு என்று பேசுகையில், இந்தியாவில் 1 ஸ்டார் முதல் 5 ஸ்டார் வரை கொண்ட ஏசி மாடல்கள் வாங்க கிடைக்கின்றன. இப்போது இதில் இன்வெர்ட்டர் ஏசி மாடல்களும் அடங்குகிறது. 1 டன்.. 1.5 டன்.. 2 டன் என்று ஏசியின் அளவும் மாறுபடுகிறது. எந்த மாடல் ஏசி உங்களுக்கு சரியானது மற்றும் எது உங்களின் மின்சார கட்டணத்தை குறைக்க உதவுகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

முதலில் ஸ்டார் மதிப்பீடு பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஏசி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் இப்போது ஸ்டார் மதிப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார் மதிப்பீட்டை எரிசக்தி திறன் பணியகம் (BEE) வழங்குகிறது. மதிப்பீடுகள் 1 முதல் 5 ஸ்டார் வரை மதிப்பிடப்படுகிறது. ஏசியின் குளிரூட்டும் சக்தி மற்றும் அந்த குளிர்ச்சியை வழங்க சாதனம் எவ்வளவு மின்சார சக்தியை பயன்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் இந்த நட்சத்திர மதிப்பீடு வழங்கப்படுகிறது.
1 ஸ்டார் ஏசி என்றால், அதற்கு ஆற்றல் குறைவாக இருக்கும், அதேவேளையில், இது அதிக மின்சாரத்தை உட்கொள்ளும். இதனால் உங்களுடைய மின்சார கட்டணம் அதிகமாகும். இந்திய சந்தையில் 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ஏசிகள் தான் மிகவும் பிரபலமானவை. இவை குறைந்த மின்சாரத்துடன் சரியான ஆற்றலை வழங்குகிறது. மிகவும் டாப் குவாலிட்டி என்றால் அது 5 ஸ்டார் மதிப்பீடு பெற்ற ஏசி மாடல் தான்.
5 ஸ்டார் ஏசியின் ஆற்றல் மிகவும் சிறப்பானதாக இருக்கும், அதேவேளையில், மற்ற ஏசி மாடல்களை விட இது குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதனால், உங்களுடைய மின்சார கட்டணம் வெகுவாக குறைகிறது. உங்கள் அறையின் அளவை பொறுத்து எத்தனை டன் ஏசி வாங்குவது என்று முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால், ஸ்டார் மதிப்பீட்டில் எந்தவித அட்ஜஸ்ட்மென்ட்டும் செய்யாதீர்கள்.
3 ஸ்டார் ஏசிகள் 5 ஸ்டார் ஏசியை விட 28 சதவீத அதிக மின்சாரத்தை உட்கொள்கிறது. மின் நுகர்வு அடிப்படையில், 0.75 டன் 3 ஸ்டார் ஏசி சுமார் 524 வாட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அதே அளவில் உள்ள ஒரு 5 ஸ்டார் AC வெறும் 450 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதனால் உங்களுக்கு அதிக பணம் சேமிக்கப்படுகிறது. எனவே 5 ஸ்டார் ஏசியை வாங்கினால், உங்களுக்கு பணம் மிச்சமாகிறது.


Click it and Unblock the Notifications








