உலகமே வியக்கும் முடிவு.. அழியும் மழலை பருவம்.. ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை.. எந்த ஊருயா அது?
பொதுவாகவே ஸ்மார்ட்போன் (Smartphones) பயன்படுத்த ஒரு வயது வரம்பு உள்ளது. அதற்காக சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றாலும், 10 வயதுக்கு பின்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே குழந்தைகளின் உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும் நல்லது என்று பல்வேறு மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. இந்த வரம்புகளை பெற்றோர்கள் பின்பற்றுவதே கிடையாது.
தங்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எது நல்லது? எது கெட்டது? என்று நாள்தோறும் சிந்திக்கும் பெற்றோர்கள் கூட ஸ்மார்ட்போன் விஷயத்தில் கோட்டை விடுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நன்மைகளை மட்டுமே பார்க்கும் அவர்களுக்கு, இவற்றில் இருக்கும் மோசமான பக்கங்கள் தெரிவதில்லை. யூடியூப்பில் (YouTube) வரும் கார்டூன்களை பார்த்தால் மட்டுமே எங்கள் குழந்தை தூங்குகிறது.

ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்தால் மட்டுமே குழந்தை நன்றாக சாப்பிடுகிறது என்று பல காரணங்களை பெற்றோர்கள் சொல்லி, மீண்டும் மீண்டும் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்க உதவி வருகின்றனர். இப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளிடையே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அதில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத குழந்தைகளை விட ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் பருவ வயதை எட்டும்போது, மிகுந்த உடல் நலப் பாதிப்புகளையும், மனநலபாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் விழித்துக் கொண்டுள்ளன. குழந்தைகளிடையே ஸ்மார்ட்போனை கொடுப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வரிசையில், அயர்லாந்து (Ireland) நாட்டில் உள்ள கிரேஸ்டோன்ஸ் (Greystones) என்னும் டவுனில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த டவுனில் உள்ள எட்டு தொடக்கப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வி மற்றும் குழந்தைகள் நல சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து ஆலோசனை செய்து, குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.
இந்த தடை மூலம் கிரேஸ்டோன்ஸ் டவுனில் உள்ள குழந்தைகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வரையில், வீட்டிலோ, பள்ளியிலோ, பொது இடங்களிலோ ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது. இதுவொரு தன்னார்வ முடிவாகும். இதற்கும் அயர்லாந்து அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதுகுறித்த பள்ளி சங்கங்கள் தரப்பில், "ஸ்மார்ட்போன் வருகை காரணமாக குழந்தை பருவ காலம் அழிந்து வருகிறது.
இப்போது, குழந்தைகள் சமூக வலைதளங்களில் மட்டுமே நண்பர்களை தேடுகின்றனர். நேரில் யாரும் நட்பாக பழகுவதில்லை. இது, எதிர்காலத்தில் தனிமை உணர்வையும், தாழ்வு மனப்பான்மையையும் அவர்களிடத்தில் அதிகரிக்கும். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும் வரையில், குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளோம்.
அதே வேளையில், டிஜிட்டல் உலகில் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படாதவாறு, கம்ப்யூட்டர் வகுப்புகளும் அவர்களுக்கு எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இது குழந்தைகளின் தனியுரிமையில் தலையிடுவது போல இருப்பதாக பலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்கள் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








