ரயில் டிக்கெட் புக்கிங்கில் அதிரடி அப்டேட்.. அடேங்கப்பா! இவ்வளவு புதிய வசதிகளா? முழு விவரம் இதோ!
இந்தியா முழுவதும் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெரும்பாலானோர் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் அதிக பயனர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை அணுகுவதால், டிக்கெட் முன்பதிவின் போது பயணிகள் அடிக்கடி சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.
இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, ஐஆர்சிடிசி இணையதளத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், பயனர்களுக்கு இடையூறு இல்லாத சேவையை வழங்கவும் ரயில்வே அமைச்சகம் இணையதளத்தை நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக புதிய வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இதன் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதாவது வரும் ஜூலை 15ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அறிமுகமாகிறது. இந்த புதிய இணையதளத்தின் மூலம் இனி ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன்பு ஒரு நிமிடத்திற்கு சுமார் 32,000 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யும் வசதி இருந்தது.
குறிப்பாக மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிமிடத்திற்கு 4 லட்சம் முதல் 40 லட்சம் வரை ரயில்வே உதவிகளைக் கேட்டுப் பெற முடியும். அதுவும் பிஎன்ஆர் (PNR) மற்றும் ரயில் நேரம் உள்ளிட்ட விவரங்களை இனி ஒரே நிமிடத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் தேடி தெரிந்து கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகமான பிறகு, தட்கல் ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் விரைவாகவும் எளிதாகவும் முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தட்கல் முன்பதிவு நேரங்களிலும் இணையதளம் ஹேங் ஆகாமல் சீராக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் முன்பதிவின்போது தேவையற்ற CAPTCHA சரிபார்ப்புகள் கேட்கப்படாது என்பதால், முன்பதிவு செயல்முறை இன்னும் வேகமாக இருக்கும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுவும் புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவைத் தாமதப்படுத்தும் பாப்-அப் விளம்பரங்கள் இடம்பெறாது. இதனால் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் விரைவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். மேலும், முன்பதிவின்போதே தங்களுக்கு விருப்பமான இருக்கை அல்லது படுக்கை (Seat/Berth) வசதியைத் தேர்வு செய்யும் புதிய அம்சமும் சேர்க்கப்படும்.
அதேபோல் வெவ்வேறு தேதிகளில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்க 'Fare Calendar' வசதி சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் வெவ்வேறு நாட்களில் டிக்கெட் என்னென்ன விலையில் உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்த்து, குறைந்த விலையுள்ள தேதியை எளிமையாகத் தேர்வு செய்யலாம்.

இந்த புதிய அம்சங்களுடன், தற்போது இருப்பதை விட 10 மடங்கு அதிகமான பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் எந்த சிக்கலும் இல்லாமல் ஐஆர்சிடிசி இணையதளம் செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அனைத்து புதிய வசதிகளும் RailOne செயலியிலும் பயனர்களுக்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications