IRCTC புது ரூல்ஸ்.. காலை 8 - 10 மணிக்குள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதி.. இனி என்ன செய்ய வேண்டும்?
ஐஆர்சிடிசி (IRCTC) என்கிற இந்திய ரயில்வே ஆனது ஆன்லைன் வழியாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறையில் ஒரு புதிய விதியை அமல்படுத்தி உள்ளது. இனி காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலாக கூட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆதார் அங்கீகாரத்தை (Aadhaar authentication) வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதார் சரிபார்ப்பு செயல்முறையானது ஏற்கனவே தட்கல் டிக்கெட்டுகளில் அமலில் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2025 ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது.

கூடுதலாக கடந்த 2025 ஜூலை 15 முதல் பிஆர்எஸ் கவுண்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே முகவர்கள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஒடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்முறையையும் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது காலை நேர ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளுக்கும் புதிய கட்டுப்பாடு (ஆதார் அங்கீகாரம்) விதிக்கப்பட்டுள்ளது.
மோசடியான ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ஒரே நேரத்தில் பல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நடைமுறையை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்கீழ் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
இதை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஆனது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட டைம் ஸ்லாட் ஆனது ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மிகவும் பரபரப்பான நேரமாகும். இந்த நேரத்தில் தான் பிரபலமான ரயில்களுக்கான டிக்கெட்டுகள் திறந்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும்.
இந்த இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான அதிக தேவை இருப்பதால், தானியங்கி முன்பதிவு மென்பொருள் அல்லது முகவர்களால் மோசடி டிக்கெட் முன்பதிவுகள் குறித்து அடிக்கடி புகார்கள் எழுகின்றன. ஐஆர்சிடிசி-ன் இந்த புதிய விதியின் கீழ், ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதை செய்வதன் மூலம் ரயில் முன்பதிவில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும்.
காலை 10 மணிக்கு பிறகு அல்லது இரவில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் அங்கீகாரம் தேவையில்லை என்று ஐஆர்சிடிசி தெளிவாகக் கூறியுள்ளது. இதன் பொருள், மற்ற நேரங்களில் பழைய முறையை பயன்படுத்தி எந்தவொரு பயனரும் தங்கள் கணக்கிலிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், ஒரு நாளில் முன்பதிவு தொடங்கியதும், அதாவது காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையிலான நேர இடைவெளி ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இருக்கும்.
ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், அதை உடனடியாக ஆன்லைன் வழியாகவே செய்யலாம் (How to link IRCTC account with Aadhaar via online). அதை செய்ய கீழ்வரும் எளிமையான வழிமுறைகளை படிப்படியாக பின்பற்றவும்:
1. ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ (www.irctc.co.in) வலைத்தளத்திற்குள் லாக்-இன் செய்யவும்
2. மை அக்கவுண்ட் டேப்பிற்கு சென்று ஆத்தென்டிகேட் யூசர் (Authenticate User) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் ஆதார் எண் அல்லது மெவிர்ச்சுவல் ஐடி-யை உள்ளிடவும். ஸ்க்ரீனில் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் காண்பிக்கப்படும். அது உங்கள் ஆதார் அட்டையுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
4. விவரங்களைச் சரிபார்த்து ரிசீவ் ஒடிபி (Receive OTP) என்பதை கிளிக் செய்யவும்.
5. ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி அனுப்பப்படும்.
6. அந்த ஒடிபி-ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
7. இதை செய்த பின்னர் உங்கள் ஆதார் அங்கீகார செயல்முறை நிறைவடையும், மேலும் "வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்டது" என்ற மெசேஜ் ஸ்க்ரீனில் தோன்றும்.


Click it and Unblock the Notifications








