புது IRCTC ரூல்ஸ்.. அக்டோபர் 1 முதல் அமல்.. ரயில் டிக்கெட் புக்கிங்கில் வரும் மாற்றம்.. இதோ முழு விவரம்..
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் (Aadhaar) கட்டாயம் என, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது முக்கியமான திருவிழாக்கள், பண்டிகை நாட்களுக்கு முன்பு பயணம் மேற்கொள்ள ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலான ஒன்றாக மாறிவிட்டது.
அதுவும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு என்பது தற்போது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது என்றே கூறலாம். ரயிலில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைக்கப்பட்ட பின்னர், டிக்கெட் முன்பதிவு மற்றும் தட்கல் பதிவிலும் பல்வேறு சிக்கல்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

அதேசமயம் நேரடியாக நாம் ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் பதிவு செய்ய முயன்றாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் கடுமையான நடைமுறைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி முதல்..
அதாவது ரயில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிறது அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக எந்தவொரு ரயிலுக்கும் முன்பதிவு செய்யத் தொடங்கும் முதல் 15 நிமிடங்களில், ஆதார் பதிவு செய்த பயனாளர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நேரடியாக ரயில் நிலையத்தில் செயல்படும் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், பொது முன்பதிவுக்கான 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆதார் பதிவு செய்த பயனர்களுக்கான முதல் 15 நிமிட கால அவகாசத்திற்குப் பின்னர் மற்றவர்களுக்கு டிக்கெட் பதிவுக்கான அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உதாரணமாக அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு ஒரு ரயிலில் புறப்பட திட்டமிடப்பட்டு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கினால், முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனாளர்கள் மட்டுமே பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் இந்த 15 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சாதாரண மக்களுக்கு பலன்கள்
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த புதிய விதிமுறை சாமானிய மக்களுக்கு முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் எனவும், தவறான வழிகளில் டிக்கெட் எடுப்பவர்களைத் தடுக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. சாதாரண மக்களுக்கு முன்பதிவு முறையின் பலன்கள் கிடைக்க வேண்டும். தவறான வழிகளில் டிக்கெட் எடுப்பவர்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.


Click it and Unblock the Notifications








