ரயில்களின் ஒட்டுமொத்த சேவைக்கும் ஒரே செயலி.. இனி இதன் மூலம் தான் டிக்கெட் புக்கிங்.. இதோ முழு விவரம்..
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் புதிய மொபைல் செயலியான ஸ்வாரயில் (SwaRail) செயலியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் பயனர்களுக்கு டவுன்லோடு செய்ய கிடைக்கிறது.
'SwaRail' SuperApp ஆனது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட், பிளாட்ஃபாரட் டிக்கெட் முன்பதிவு, சீசன் பாஸ், பார்சல் மற்றும் சரக்கு விசாரணைகள், ரயில் மற்றும் PNR நிலை விசாரணைகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள், புகார் மேலாண்மைக்கான ரயில் மடாட் போன்ற பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் டிக்கெட் கேன்சல் செய்த பணத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஸ்வாரயில் ஆப் வழங்குகிறது. இந்நிலையில் ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்ட SwaRail ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் என இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
இந்த ஸ்வாரயில் செயலி தற்போது பீட்டாவில் இருந்தாலும், பயனர்கள் தங்கள் தற்போதைய ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் கணக்குகளைப் பயன்படுத்தி உள்நுழையலாம் அல்லது புதிய கணக்கு ஒன்றை உருவாக்கலாம். அதுவும் இந்த செயலி ஒரு எளிய, சமகால டேஷ்போர்டை வழங்குகிறது. உங்கள் PNR நிலையைச் சரிபார்ப்பது மற்றும் உணவை முன்பதிவு செய்வது என மேற்குறிப்பிட்ட பல்வேறு சேவைகளை எளிதாகப் பெறலாம்.
குறிப்பாக ஸ்வாரயில் செயலி நேரடி ரயில் கண்காணிப்பையும் கொண்டுள்ளது. இது சரியான புதுப்பிப்புகள் உடன் ஒரு பிளாட்பாரத்தில் நின்ற எவருக்கும் மிக முக்கியமான கருவியாகச் செயல்படுகிறது. இது ரயில்கள் வரும் நேரம், தாமதங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் எண்கள் பற்றிய நிகழ் நேர விவரங்களை வழங்குகிறது.
மேலும் இந்த ஸ்வாரயில் செயலி ஆனது வெறும் ஒரு முன்பதிவு பயன்பாடாக மட்டுமில்லாமல், முழுமையான பயண உதவியாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஹோட்டல் முன்பதிவு, சுற்றுலாப் பயண ஒப்பந்தங்கள் மற்றும் பயணக் காப்பீடு என அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்திருப்பு டிக்கெட்
அதேபோல் கடந்த மே 1-ம் தேதி இந்திய ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளின் விதிகளை மாற்றியது. அதன்படி காத்திருப்பு டிக்கெட்டுகள் (waiting list tickets) உள்ள பயணிகள் இனிமேல் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது. ஒருவேளை இனி யாரிடமாவது காத்திருப்பு டிக்கெட் இருந்தால், அவர்கள் பொது வகுப்பு பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பலர் டிக்கெட் கவுண்டரில் இருந்து காத்திருப்பு டிக்கெட்டுகளை எடுத்து ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். இதனால் தான் மே 1-ம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது இந்திய ரயில்வே அமைப்பு. எனவே இப்போது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் பயணம் செய்வது முழுமையாகத் தடை செய்யப்படும். அதேசமயம் எந்தவொரு பயணிக்கும் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட் இருப்பது கண்டறியப்பட்டால் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது பொது பெட்டிக்கு அனுப்பலாம்.
காத்திருப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகளின் இருக்கைகளில் அமர முயற்சிக்கின்றனர். இது அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சிரமத்தைப் போக்கத் தான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாராவது காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் ரயில்களில் பயணம் செய்தால் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








