இது Tim Cook-ஆ இல்ல எலான் மஸ்க்-ஆ.. பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு போல..! நடந்தது என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் திறக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் 25 ஆண்டு வர்த்தகத்தைக் கொண்டாடும் விதமாக பிரத்யேக விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவேற்றார். அதேபோல் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், நேஹா தூபியா மற்றும் பல பிரபலங்களை டிம்குக் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டெல்லி ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிகேசி ஸ்டோரை விட அளவில் சற்றே சிறியதாக இருக்கிறது. மேலும் டெல்லி ஆப்பிள் ஸ்டோரில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் ஆப்பிள் சாதனங்கள் குறித்த செயல்முறை விளக்கம் பெற்று, முழு தகவல்களை அறிந்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்களைச் சேர்த்து, இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசும் திறன் கொண்டுள்ளனர்.
குறிப்பாக சகெட் ஸ்டோர் என்று அழைக்கப்படும் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டிம் குக் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் சோனம் கபூருடன் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.
இந்த போட்டியின் போது கேமரா டிம் குக் மற்றும் சோனம் கபூர் பக்கம் திரும்பியதும், ஜியோ சினிமாவின் கன்னட வர்ணனையாளர்கள் டிம் குக் தான் எலான் மஸ்க் என்று நினைத்துள்ளார்கள். மேலும் டிம் குக், சோனம் கபூருடன் கூட்டத்தை நோக்கி கை அசைப்பது போல் காட்டப்பட்டதால், வர்ணனையாளர்கள் டிம் குக்கை தவறுதலாக 'ட்விட்டர் CEO' என்று அழைத்துள்ளனர். இதை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் கன்னட வர்ணனையாளர்கள் டிம் குக் தான் எலான் மஸ்க் என்று தவறுதலாகக் கூறிவிட்டனர் என்று வைரலாக்கி வருகின்றனர்.

அதேபோல் பெரிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் கூட டிம் குக் சந்தித்துள்ளார். ஏற்கனவே மும்பை வந்த உடன் முகேஷ் அம்பானியை அவரது இல்லத்தில் டிம் குக் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனையும் டிம் குக் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்திப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மறுபுறம், பெங்களூரு அருகே இருக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதவிர வரும் ஜூன் 5 ஆம் தேதி WWDC எனப்படும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது. குறிப்பாக நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியிடப்படும். குறிப்பாக ஐபோன், வாட்ச், மேக், டிவி, ஐபேட் போன்ற மாடல்களுக்கு புதிய ஓஎஸ் அப்டேட்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications