இந்தியாவில் வெடித்து சிதறிய ஐபோன்.. என்ன மாடல்? என்ன காரணம்? யாருக்கு என்ன ஆச்சு?
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன, ஆனால் சமீபத்திய காலங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைந்த விலையில் வாங்கப்படும் அடிப்படை வேரியண்ட் ஆண்ட்ராய்டு போன்கள் தான் அதிகமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் பாண்ட் பாக்கெட்டில் ஒரு ஐபோன் சாதனம் வெடித்து சிதறிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐபோன் தொடரில் வரும் மாடல்களில் இது எந்த வகை மாடல் என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை. வீட்டில் அமர்ந்திருந்தபோது அவருடைய ஐபோன் வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

வெளியான அறிக்கையின் படி, அலிகாரைச் சேர்ந்த 47 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பிரேம் ராஜ் சிங், தனது பாக்கெட்டிற்குள் ஐபோன் ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. முதலில் இந்த போன் சூடாவதை உணர்ந்திருக்கிறார். பின்னர் சில நேரத்தில், அதிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
ஐபோன் வெடிப்பு காரணமாக, சிங்கின் இடது தொடை மற்றும் கட்டைவிரலில் தீக்காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், இந்த வெடிப்பு நிகழ்வு தொடர்பாக அவர் கூறுகையில், " என் பாக்கெட்டிலிருந்த ஐபோன் சூடானது, வெளியே எடுத்தேன், அது ஒரு பெரிய ஒலியுடன் வெடித்தது.
அதைத் தொடர்ந்து ஐபோன் சாதனம் இரண்டு துண்டுகளாக உடைந்தது," என்று அவர் கூறியுள்ளார். ஃபோன் சார்ஜரில் செருகப்பட்டிருக்கலாம் அல்லது நீண்ட நேரம் உபயோகிப்பதால் ஃபோன் சூடாவது போன்ற மற்ற தேவையற்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் பகிரப்பட்ட படத்தின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது இது பழைய iPhone 8 அல்லது iPhone 7 போல் தெரிகிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஐபோன்களைப் பயன்படுத்துவதாக சிங் கூறினார். ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார். முன் மற்றும் பின் பேனலை ஒன்றுடன் ஒன்று பிரித்து வைத்து வெடித்து சிதறிய பிறகு தொலைபேசியும் இரண்டாக உடைந்தது. ஐபோன் முற்றிலும் எரிந்திருப்பதை படம் காட்டுகிறது.
சிங் மஹுவா கெரா காவல் நிலையத்தில் பிராண்டிற்கு எதிராக புகார் அளித்தார். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பிற்கான உண்மையான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில், ஸ்மார்ட்போன்கள் பொதுவாக தவறான பேட்டரிகள் அல்லது ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் சம்பந்தப்பட்ட கடைசி ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவம் 2021 இல் தெரிவிக்கப்பட்டது. அதில் மெல்போர்னைச் சேர்ந்த ஒருவர் தனது ஐபோன் X இரண்டாம் நிலை தீக்காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
இது போன்ற பல ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து உலகளவில் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. குறிப்பாக, தலை சிறந்த பிராண்டுகளின் சாதனங்களும் இதுபோன்ற வெடிப்பு நிகழ்வில் சிக்கி சின்னாபின்னம் ஆகிய சம்பவங்களும் இதற்கு முன்பு பதிவாகியுள்ளது. போன்களின் வெடிப்பிற்கு பெரும்பாலும் தவறான சார்ஜிங் பழக்கங்கள் தான் காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








