ஒரே கல்லுல 3 மாங்காய்.. iPhone 18e உடன் சேர்த்து 3 என்ட்ரி லெவல் தயாரிப்புகள்.. Apple-ன் அடேங்கப்பா ஐடியா!
ஆப்பிள் (Apple) நிறுவனம் அடுத்த சில மாதங்களுக்குள் அதன் 3 புதிய என்ட்ரி லெவல் தயாரிப்புகளை (Entry Level Products) அறிமுகப்படுத்ததும் என்று கூறப்படுகிறது. முதலாவதாக - ஏ-சீரீஸ் சிப்பை கொண்டதாகக் கூறப்படும் ஆப்பிளின் முதல் பட்ஜெட்விலை மேக்புக் (Budget-friendly MacBook with A series chip) மாடல்.
இரண்டாவதாக - இந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16இ (iPhone 16e) மாடலுக்கு அடுத்தபடியாக ஐபோன் 17இ (iPhone 17e) மாடலும் சந்தைக்கு வரும். ஐபோன் 16இ தான் தற்போது ஆப்பிளின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவு விலை ஐபோன் ஆகும். மூன்றாவதாக - ஆப்பிள் நிறுவனம் அதன் 12த் ஜெனரேஷன் ஐபேட் மாடலில் பணிபுரிவதாகவும், இது ஏ18 சிப் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதெல்லாம் எப்போது அறிமுகமாகும்? மேக்ரூமர்ஸ்-க்கு (MacRumors) ஹைடோங் சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சியை (Haitong International Tech Research) சேர்ந்த ஜெஃப் புவின் (Jeff Pu) ஆராய்ச்சிக் குறிப்பின் வழியாக கிடைத்த தகவலின்படி ஆப்பிள் அதன் புதிய என்ட்ரி லெவல் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் மாடல்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தலாம்
ஐபோன் 17இ மாடல் ஆனது 2026 வசந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதனுடன் 12த் ஜெனரேஷன் ஐபேட் மற்றும் ஒரு புதிய என்ட்ரி லெவல் மேக்புக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. பட்ஜெட் விலையிலான மேக்புக் ஆனது ஐபோன் 16 ப்ரோ மாடல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஏ18 ப்ரோவை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது 13-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்
பட்ஜெட் விலையிலான மேக்புக் மாடல் ஆனது சில்வர், ப்ளூ, பிங்க் மற்றும் யெல்லோ ஆகிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது $699 (தோராயமாக ரூ. 62,000) முதல் $899 (தோராயமாக ரூ. 80,000) வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆய்வாளர் ஜெஃப் புவின் கூற்றுப்படி, ஐபோன் 17இ மாடல் ஆனது ஆப்பிளின் ஏ19 சிப் கொண்டு இயங்கலாம். இதில் 18 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் ஆப்பிளின் சி1 மோடம் பொருத்தப்படலாம். ஐபோன் எஸ்இ சீரீஸை மாற்றியமைத்த தற்போதைய மாடலுடன் (ஐபோன் 16இ) ஒப்பிடும் போது ஐபோன் 17இ ஆனது பெரிய அளவிலான வன்பொருள் மேம்படுத்தல்களை பெற, அதிக வாய்ப்பில்லை.
கடைசியாக உள்ள 12த் ஜெனரேஷன் ஐபேட் ஆனது ஏ18 சிப்பில் இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் வழியாக ஆப்பிள் நிறுவனம் ஆனது முதல் முறையாக என்ட்ரி லெவல் ஐபேடில் - ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆதரவை சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை பொறுத்தவரை - இந்த புதிய மாடல் அதன் முன்னோடியை போலவே இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது பயனர்கள் எந்த வடிவமைப்பு மாற்றங்களையும் எதிர்பார்க்கக்கூடாது.
ஐபோன் 18 சீரீஸை (iPhone 18 Series) பொறுத்தவரை எல்லா மாடல்களும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம். ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மாடல்கள் மற்றும் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் (Apple First Foldable iPhone) ஆனது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம். அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் ஐபோன் 18 (iPhone 18), ஐபோன் 18இ (iPhone 18e) மற்றும் ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) ஆகிய மாடலன் 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம்.


Click it and Unblock the Notifications








