iPhone 15 Pro விலை இவ்வளவு அதிகமா? மனசாட்சியே இல்லாமல் விலை உயர்த்தும் ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் வரும் 2023 செப்டம்பர் மாதத்தில் அதன் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் ரசிகர்கள் இப்போதே ஐபோன் 15 சீரிஸ் வரிசை மாடல்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஐபோன் 15 சீரிஸ் மாடலை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனர்களுக்கு ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, விரைவில் அறிமுகமாக காத்திருக்கும் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் iPhone 15 சீரிஸ் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகிய நான்கு மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

வால் ஸ்ட்ரீட் ஆய்வாளர் டான் இவ்ஸ் கருத்துப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் உள்ள ப்ரோ மாடல்களின் விலையை சுமார் $200 டாலர் வரை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, டான் இவ்ஸ் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை உயர்வை கணித்தது, அது மிகவும் துல்லியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
CNBC உடனான ஒரு அமர்வில், ஐபோன் 15 தொடரிலும் ஆப்பிள் அதே உத்தியைப் பின்பற்றலாம் என்று ஆய்வாளர் கூறியுள்ளார். ஆனால், அவர் குறிப்பாக மாடல் வாரியான விலை விபரங்களை குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் அதன் புதிய ஐபோன்களின் சராசரி விற்பனை விலையை (ஏஎஸ்பி) உயர்த்தும் என்பது உறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலை கட்டாயம் உயர்வு பெரும் என்று அவர் கூறியுள்ளார். ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் $200 வரை உயர வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய iPhone 14 தொடரின் ஆரம்ப விலை iPhone 14 இன் அடிப்படை மாடலுக்கு $799 ஆகும். iPhone 14 Plus விலை $899 ஆகும்.

அதேபோல், iPhone 14 Pro மாடலின் விலை $999 ஆகும். மறுபுறம், iPhone 14 Pro Max மாடலின் விலை $1,099 ஆகும். ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆய்வாளர்கள் எதிர்பார்த்தபடி விலை உயர்வைப் பெற்றால், iPhone 15 Pro ஆனது வரும் செப்டம்பர் மாதத்தில் $1,199 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.99,000 ஆகும்.
அதேபோல், iPhone 15 Pro Max மாடலின் விலை $1,299 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,07,000 விலையில் வரலாம். ஐவ்ஸின் கூற்றுப்படி, குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமானது விலைவாசி உயர்வுடன் அதன் மதிப்பீட்டை உயர்த்த விரும்புகிறது.
அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் அதன் மதிப்பீடு தற்போதைய $2.85 டிரில்லியனில் இருந்து $3.5 டிரில்லியன் முதல் $4 டிரில்லியன் வரை உயரும் என்று ஆப்பிள் எதிர்பார்க்கிறது என்று அவர் கூறுகிறார். எது எப்படியாக இருந்தாலும், ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் 200 டாலர் அதிக விலையுடன் வெளிவர வாய்ப்புள்ளது என்ற செய்தி, ஆப்பிள் ரசிகர்களை சற்று கவலையடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








