வயசானாலும்.. வியாபார தந்திரத்துல நான் கிங்கு.. TATA-வின் கைக்கு வந்த MADE IN INDIA ஐபோன் தயாரிப்பு!
குபெர்டினோவை தளமாக கொண்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவங்களில் ஒன்றான ஆப்பிள் (Apple), இந்தியாவில் அதன் ஐபோன் (iPhone) மாடல்களை தயாரிக்க ஃபாக்ஸ்கான் (Foxconn), பெகாட்ரான் (Pegatron) மற்றும் லக்ஸ்ஷேர் (Luxshare) ஆகிய மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்களை (Contract Manufacturers) தன்வசம் கொண்டுள்ளது.
இதற்கிடையில், டாடா (Tata) நிறுவனமானது ஆப்பிளின் நான்காவது ஒப்பந்த உற்பத்தியாளராக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆராய்ச்சி நிறுவனமான ட்ரெண்ட்ஃபோர்ஸின் (TrendForce) கூற்றுப்படி, தென்னிந்தியாவில் உள்ள தைவானிய நிறுவனமான விஸ்ட்ரான் (Wistron) தொழிற்சாலையை டாடா குழுமம் கையகப்படுத்தியதின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது.

கர்நாடகாவில் (Karnataka) உள்ள தனது தொழிற்சாலையை டாடா குழுமம் (Tata Group) கையகப்படுத்தியதன் விளைவாக விஸ்ட்ரான் நிறுவனம் அதன் இந்திய செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாகவும், மேலும் டாடா நிறுவனமானது விஸ்ட்ரானின் ப்ரொடெக்ஷன் லைன்-ஐ (Production line) வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலின் வழியாக இந்தியாவில் தான் நடத்திய ஐபோன் அசெம்பிளி (iPhone Assembly) வணிகத்திலிருந்து விஸ்ட்ரான் வெளியேறுவதையும், இனிமேல் அந்த வேலையை டாடா நிறுவனம் செய்யும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, டாடா குழுமமானது ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடல்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது.
அதாவது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் புதிய ஐபோன்களுக்கான ஆர்டர்களை டாடா குழுமம் பெற்றுள்ளது. இருப்பினும் ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் தயாரிப்பில் ஒரு சிறிய பகுதியை டாடா குழுமம் பெறும். அதாவது இந்நிறுவனம் குறிப்பிட்ட இரண்டு மாடல்களிலும் 5 சதவீதத்தை மட்டுமே அசெம்பிள் செய்யும்.
ரெகுலர் வேரியண்ட்டை (Regular Variant) பொறுத்தவரை, ஃபாக்ஸ்கான் மற்றும் லக்ஸ்ஷேர் ஆகியவைகள் முறையே 70 மற்றும் 25 சதவீதத்தை அசெம்பிள் செய்யும். பிளஸ் வேரியண்ட்டை (Plus Variant) பொறுத்தவரை லக்ஸ்ஷேர் மற்றும் பெகாட்ரான் ஆகியவைகள் முறையே 60 மற்றும் 35 சதவிகித அசெம்பிளி ஆர்டர்களை பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடல்களை பொறுத்தவரை, ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸின் 70 சதவீத அசெம்பிளி ஆர்டர்களை ஃபாக்ஸ்கான் பெறும். ட்ரெண்ட்ஃபோர்ஸ் வழியாக கிடைக்கப்பட்ட இந்த எல்லா தகவல்களையும் வைத்து பார்க்கும் போது, ஆப்பிளின் புதிய சப்ளையர்கள் குறைந்த அளவிலான மாடல்களுக்கு சிறிய அளவிலான ஆர்டர்களை பெறுகிறார்கள் என்பதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.
டாடா குழுமத்திற்கு குறைவான ஆர்டர் கொடுப்பது ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக இருக்கலாம், எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு ஐபோன் யூனிட்களை உற்பத்தி செய்யும் டாடா குழுமத்தின் பங்களிப்பு அதிகரிக்கப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியா தான் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகும்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அதன் ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. மேலும் அதன் உற்பத்தி முயற்சிகளை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இதனால் ஆப்பிளுக்கு என்ன நன்மை என்று கேட்டால்.. அதன் ப்ரொடெக்ஷன் ஃபெசிலிட்டிகளை (Production facilities) மற்ற நாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் சீனாவை சார்ந்திருக்கும் நிலைமை (Dependency on China) குறைந்துகொண்டே போகும்!


Click it and Unblock the Notifications








