திருப்பூரில் 'க்யூ.ஆர்' ஸ்டிக்கர் மூலம் நூதன மோசடி.! கடைக்காரர்களே கவனமாக இருக்க வேண்டும்.!
தற்போது அனைத்து இடங்களிலும் போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இதுபோன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. அதாவது முன்பு மொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்று டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்கும் போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற பல செயலிகள் உள்ளன. குறிப்பாக நாம் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த மிக அருமையாக பயன்படுகின்றன போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள்.

இந்நிலையில் திருப்பூரில் க்யூ ஆர் ஸ்டிக்கர் மூலமாக கொள்ளையர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியதில் தள்ளுவண்டி கடை தொடங்கி ஓட்டல் வரை பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் அருகே இருக்கும் முதலிபாளையத்தில் துரைசாமி என்பவர் ஓட்டல் மற்றும் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு சாப்பிட சென்ற ஒருவர் 'க்யூ ஆர்' கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் துரைசாமியின் வங்கி கணக்குக்கு பணம் செல்லவில்லை.

பின்பு மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்த போது க்யூ ஆர் கோடில் ஓட்டல் பெயரில்லாமல் வேறு பெயர் வருவதை துரைசாமியிடம்காட்டியுள்ளார். அதன்பின்பு தான் அந்த க்யூ ஆர் ஸ்டிக்கரை பார்த்த போது அதன் மீது போலியான வேறு ஒரு ஸ்டிக்கர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு இருக்கும் சிசிடிவியை ஆராய்ந்தபோது, நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர், துரைசாமி கடையில் இருந்த க்யூ ஆர் கோடு ஸ்டிக்கரின் மீது வேறு ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. இவரது கடை மட்டுமில்லாமல் அருகே உள்ள மற்றொரு ஓட்டல், ஒர்க்ஷாப், மளிகை கடை என, முதலிபாளையம் சிட்கோவில் உள்ள பெரும்பாலான கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரிந்தது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்துள்ளனர். பின்பு திருப்பூர் மாவட்ட எஸ்.பி செஷாங் சாயிடம் இதுகுறித்து கேட்டபோது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள் க்யூ ஆர் கோடி பணம் அனுப்பும் முன் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை உறுதி
செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல் கடைகளில் வெளி சுவற்றில் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டாம். இதுபோன்ற மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்


Click it and Unblock the Notifications