அதிகரிக்கும் காற்று மாசு.. ரூ.3500 விலையில் காற்று மாசு எதிர்கொள்ள சிறிய ரக சாதனம்..
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காற்றின் மாசு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள சிறிய ரக சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அட்டோவியோ எனும் நிறுவனம் இந்தியாவின் முதல் கையடக்க காற்று சுத்திகரிப்பானைக் (Indias first wearable air purifier) கண்டுபிடித்துள்ளது. இதனை அட்டோவியோ பெபல் (atovio Pebble) என்று அழைக்கின்றனர்.

குறிப்பாக டெல்லியின் காற்றுமாசினால் நீண்டகால நோக்கில் பல உடல் உபாதைகள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளதால், கடந்த சில வாரங்களாக இந்த கருவிக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதுவும் கழுத்தில் அணிகலனாக அணிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த சாதனத்தைக் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்துள்ளனர். இதுவரை 15000க்கும் மேற்பட்டோர் இந்த சாதனத்தை வாங்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் அட்டோவியோ. இதன் 3 நிறுவனர்களில் ஒருவரான அன்மய் ஷாலோட் கூறுகையில். மொத்த விற்பனையில் 30-35 சதவீதம் கடந்த வாரங்களில் வந்துள்ளது. அதுவும் டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாதனத்தை வாங்கியிருக்கின்றனர்.
அதேசமயம் இது பாரம்பரிய காற்று சுத்திகரிப்பான்கள் மாதிரி இருந்தாலும், செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடிவதனாலும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது எளிமையாக இருப்பதனாலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் விலை ரூ.3500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெபலை 1000 மணி நேரம் வரை பயன்படுத்தமுடியும் என்கின்றனர்.
ஆனாலும் இதை வைத்து ஒரு நபர் சுவாசிக்கும் காற்றை மட்டுமே சுத்திகரிக்க முடியும். இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்து செல்லும்போது புதிய காற்று வந்துகொண்டே இருப்பதால் இதனால் பெரிய அளவில் பலன் கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு அறை முழுமைக்கும் காற்றை சுத்திகரிக்க இதை விட பாரம்பரிய சுத்திகரிப்பான்கள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே வெளியில் அலுவலகத்துக்கோ, பிற இடங்களுக்கோ செல்லும்போதே இது திறன்மிக்கதாக இருக்கும்.
அட்டோவியோ பெபல் சாதனத்தில் மாறி அயனி தொழில்நுட்பம் (Advanced Variable Anion Technology) பயன்படுத்தப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இது காற்றில் உள்ள PM2.5, PM10, பாக்டீரியா மற்றும் பிற நானோ துகள்கள் போன்ற மாசுபடுத்திகளை அழிக்கிறது. அதுவும் இது பாரம்பரிய HEPA (High Efficiency Particulate Air) சுத்திகரிப்பான்களைவிட மேம்பட்ட முறை என்று கூறுகின்றனர்.
அதேபோல் இந்த சாதனத்தை கான்பூர் ஐஐடியில் சோதித்து இந்தியாவின் தீவிர காற்றுமாசுபாட்டை நிவர்த்தி செய்யும் கருவியாக நிறுவியிருக்கின்றனர். இதில் நார்மல் மற்றும் டர்போ என இரண்டு மோட்களை கொடுத்துள்ளனர். காற்றின் தரக் குறியீடு 200ஐத் தாண்டும்போது டர்போ பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இருந்தபோதிலும் இந்த சாதனம் புகை போன்ற பெரிய துகள்களை கட்டுப்படுத்தினாலும் பெருநகரங்களின் நுண்ணிய மாசுக்கு எதிராக பலவீனமானதாகவே இருக்கும் என கருதுகின்றனர் அறிவியலாளர்கள். இது போன்ற கருவிகள் 1-10 மைக்ரோ மீட்டர் துகள்களை கட்டுப்படுத்த சிறந்தவை. ஆனால் மிகவும் அபாயகரமான மாசு துகள்கள் பொதுவாக 0.1 மைக்ரோ மீட்டரை விட சிறியதாக இருக்கும் என்கின்றனர் அறிஞர்கள். ஆனாலும் டெல்லியில் உச்சக்கட்ட புகை மூட்டப் பருவத்தில் இந்த கருவி சிறிய அளவில் பயனளிக்கலாம்.


Click it and Unblock the Notifications








