ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி சிரமம் இருக்காது.. அனைத்து சேவைகளுக்கும் சூப்பர் ஆப் போதும்..
இந்தியன் ரயில்வே (indian railway) அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு சேவையும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் பெறும் வகையில் சூப்பர் ஆப் ஒன்றை இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பேருந்து மற்றும் விமானம் போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்ய தான் அதிக மக்கள் விரும்புகின்றனர். அதுவும் ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மக்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் வாயிலாக தான் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில் சுற்றுலா என தனித்தனியாகச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் உபயோகிப்பாளர்கள் ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என்றே கூறலாம். இந்நிலையில் தான் ரயில்வே அமைப்பின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில் சூப்பர் ஆப் எனும் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த சூப்பர் ஆப் மூலம் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். அதேபோல் டிக்கெட் ரத்து செய்தால் அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும்ப பெற முடியும். மேலும் பி.என்.ஆர். சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர் போன்ற பல்வேறு சேவைகளை இந்த சூப்பர் ஆப் மூலம் நாம் பெற முடியும்.
CNBC-TV18 அறிக்கையின்படி, இந்த புதிய ஆப் ஆனது இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும் - ஒன்று பயணிகளுக்கானது மற்றும் மற்றொன்று சரக்கு வாடிக்கையாளர்களுடன் தொடர்புடையது. அதன்படி சரக்கு அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இந்த ஆப் வசதியில் இடம்பெறும்.
தற்போது இந்த சூப்பர் ஆப் உருவாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது என்றும், இன்னும் சில மாதங்களில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சூப்பர் ஆப் அறிமுக தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதேசமயம் இந்த சூப்பர் ஆப் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால் பயணியர் அனைத்து வசதிகளையும் இந்த ஒரே ஆப் மூலம் எளிதில் பெறலாம். குறிப்பாக ரயில் பயணிகள் சிரமம் இன்றி டிக்கெட் முன்பதிவு
செய்யலாம்.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு தான் யூடிஎஸ் செயலியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி யூடிஎஸ் செயலி (UTS App) மூலம் பிளாட்பாம் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட், மாதாந்திர டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் ஆகியவற்றை உடனடியாக பெறமுடியும். குறிப்பாக ரயில்வே அமைப்பு மையத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ஆப் நாம் பயன்படுத்தும் ஜிபிஎஸ் தகவல் அடிப்படையில் செயல்படுகிறது.

இந்த யூடிஎஸ் ஆப் வசதியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதாவது இந்த யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால், ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவிலும் மற்றும் 2 கி.மீ தொலைவு உள்ளேயும் இருக்க வேண்டும். இதனால் டிக்கெட் எடுப்பதில் பலருக்கும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து நீண்ட நாட்களாக யுடிஎஸ் செயலி உபயோகப்படுத்தும் பயனாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இந்த முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ரயில்வே அமைப்பு. அதாவது தற்போது யூடிஎஸ் செயலி வாயிலாக ரயில் நிலையத்தின் அருகே அல்லது வீட்டில் இருந்தே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.
யூடிஎஸ் செயலி வாயிலாக புறநகர் ரயில் டிக்கெட் பதிவு செய்வதில் ஜியோ-ஃபென்சிங் (Geo-Fencing) கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகளை ரயில்வே நீக்கியுள்ளது. இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட், புறநகர் ரயில் டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகியவற்றைச் செயலி வாயிலாக வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும்.
source: inc42.com, dinamalar


Click it and Unblock the Notifications








