மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் டிக்கெட்டுகள்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரயில்வே..
நாட்டில் ரயில் சேவைகளைப் பெறுவதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பல்வேறு செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக இதில் மிகவும் முக்கியமானது யுடிஎஸ் (UTS) செயலி ஆகும். இந்த நிலையில் யுடிஎஸ் செயலி குறித்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே அமைப்பு. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பொதுவாக யுடிஎஸ் செயலியை பயன்படுத்தி பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக இந்த செயலி இருந்தால் ரயில் நிலையங்களில் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

யுடிஎஸ் செயலி செயல்படாது
இந்நிலையில் வரும் மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் யுடிஎஸ் செயலி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக கொண்டுவரப்பட்ட ரயில்ஒன் செயலி மூலம் டிக்கெட்டுகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ரயில்ஒன் (RailOne) செயலி மூலம் பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை பெற முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பான வசதிகள் ரயில்ஒன் செயலியில் உள்ளன.
அதன்படி ரயில்ஒன் செயலியில் ரயில்கள் தேடல், பிஎன்ஆர் நிலை, ரயிலை டிராக் செய்தல், உணவு ஆர்டர், டிக்கெட் ரீபண்ட் பெறுதல் சேவைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ரயலிவே புகார்களை அளிக்கும் ரயில் மதாத் சேவையும் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலியைப் பயன்படுத்த அவசியம் இருக்காது.
அதேபோல் ரயில்ஒன் செயலி பதிவிறக்கம் செய்து யுடிஎஸ் செயலியின் பயனாளர் குறியீடுகளை பயன்படுத்தியே கணக்கை துவங்கலாம். ஏற்கனவே சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயில்ஒன் செயலிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.
குறிப்பாக ரயில்ஓன் செயலியில் உள்ள R-wallet மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் கேஷ்பேக் (Cashback) வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 சதவீத தள்ளுபடி சலுகை ஆனது ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை ரயில்ஒன் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்கள், கவுண்டர்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள R-wallet மூலம் 3 சதவீத கேஷ்பேக் வசதி இதனுடன் சேர்த்து தொடர்ந்து செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளைக் காகிதமில்லா மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற இந்த கேஷ்பேக் சலுகை திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சலுகை உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்க.


Click it and Unblock the Notifications