Indian Railway: ரயில் டிக்கெட் முன்பதிவு.. வருகிறது அதிரடி மாற்றம்.. இனி சிரமம் இருக்காது.. எப்போது முதல்?
தொலைதூர பயணங்களுக்கு பேருந்து மற்றும் விமான போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணம் செய்ய முடியும் என்பதால் தான் அதிக மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர்.
அதேபோல் இப்போது நவீனத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குத் தகுந்தபடி இந்திய ரயில்வே துறை பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. அதேபோல் 40 ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் PRS - Passenger Reservation System எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பினை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் டெல்லி ரயில்வே பவனில் உள்ள அதிகாரிகளோடு முக்கியமான ஒரு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தொழில்நுட்ப ரீதியிலாக பயணிகள் முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
அதுவும் 1986-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவந்த ரயில்வே டிக்கெட் முறை தான் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. ஆகவே இந்த 40 ஆண்டுகளில் இணையதளம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. குறிப்பாக மொபைல் போன்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவை பெருகிவிட்டன.
ஆனாலும் ரயில்வே அமைப்பு சிறு சிறு மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தாலும் தொழில்நுட்ப ரீதியில் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் கொண்டுவரப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து தான் இந்தியாவில் இன்டர்நெட் அடிப்படையிலான டிக்கெட் முன்பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாட்டில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களில் 88 சதவீதம் ஆன்லைன் தளங்கள் வழியாக தான் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் மக்கள் தற்போது ரயில்வே கவுண்டர்களுக்குச் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வது குறைந்துள்ளது
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Rail one செயலியை பயன்படுத்தி தான் மக்கள் அதிகம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதுவரை 3.5 கோடி பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரயில்வே துறை சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் இந்த செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
அதாவது ரயில் ஒன் செயலியை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது, டிக்கெட் ரத்து செய்வது, ரயில் லைவ் ஸ்டேடஸ் தகவல்கள், புகார் தருவது, உணவு ஆர்டர் செய்வது என அனைத்தும் செய்து கொள்ள முடியும். இந்நிலையில் இந்த செயலியை ஏஐ அடிப்படையில் மேம்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு அமைப்புக்கு தற்போது செய்யும் செலவுகளைக் குறைத்து ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் மிகவும் எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது இந்திய ரயில்வே ( Indian Railways). இந்த புதிய மாற்றம் ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. தற்போது இதற்கான ஆய்வுகளும் பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதுவும் பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மாற்றம் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. குறிப்பாக டிக்கெட் பதிவின் போதே அது உறுதியாவதற்கான வாய்ப்பினை 100 சதவீதம் கணிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த புதிய மாற்றம் அனைத்து ரயில் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications