இனி ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பாக கூட டிக்கெட் பெறலாம்.! IRCTC புதிய அறிவிப்பு.!
நாளை முதல் ரயில் பயணிகளுக்கு, ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பு வரை டிக்கெட் கொடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி ரயில்வே பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

கொரோனா தொற்றுநோய் காரணமாகக் கட்டுப்பாடுகளுடன் ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்பொழுது பண்டிகை காலம் நெருங்குவதைத் தொடர்ந்து ரயில் சேவையில் விதிக்கப்பட்டிருந்தது கட்டுப்பாடுகளுக்கு சில தளர்வுகளைக் கொண்டு வரலாம் என்று IRCTC முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய அறிவிப்பை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டுடன் இயக்கப்பட்டு வரும் ரயில் சேவையைப் பயன்படுத்த பயணிகளுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தான் இதுவரை இரண்டாவது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.

ஆனால், பண்டிகை காலத்தை முன்னிட்டு இனி இந்த முறை செயல்படுத்தப்படாது என்று IRCTC அறிவித்துள்ளது. பழைய டிக்கெட் பதிவு முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை பயணிகள் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் இரண்டாவது சார்ட் 5 நிமிடத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என்று IRCTC அறிவித்துள்ளது.இந்த இறுதிக்கட்ட நேரத்தில் கூட இனிமேல் பயணிகள் டிக்கெட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சார்ட் வெளியிடப்படும் இறுதி நேரம் வரை பயணிகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக டிக்கெட் கவுண்டர் மூலமாகவோ இனி பயணத்திற்கான டிக்கெட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications