அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? டிசம்பர் 26 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன மாற்றம்? இதோ விவரம்..
இந்திய ரயில்வே துறை ( Indian Railways) தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புதிய நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வரும். அதாவது இந்திய ரயில்வே துறை புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுதவிர பல்வேறு புதிய விதிகளையும் செயல்படுத்தி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்
தற்போது இந்திய ரயில்வே துறை புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த மாற்றம் வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் மாத சீசனல் டிக்கெட்டுகளின் (Monthly Seasonal ticket) விலையில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ வரையிலும் விலை மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 215 கி.மீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 1 பைசா அதிகரிக்கப்பட உள்ளது.
மெயில் மற்றும் ஏசி இல்லா எக்ஸ்பிரஸ்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் ஏசி வகுப்பிற்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்படுகிறது.
500 கிலோ மீட்டர்களுக்கு ஏசி இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ரூ.10 அதிகமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினால் இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.600 கோடி வருமானம் கிடைக்கும். குறிப்பாக அதிக செலவினங்களைச் சமாளிக்க, பயணிகள் கட்டணத்தில் ஒரு சிறிய அளவு மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் தனது சேவைகளைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. அதுவும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துகிறது. இதன் விலை விளைவாகச் செலவு ரூ. 1,15,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25ம் ஆண்டில் மொத்த செயல்பாட்டுச் செலவு 2,63,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் பண்டிகை காலங்களில் 12,000க்கும் மேற்பட்ட ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு இருக்கிறது. தனது இலக்குகளை அடைவதற்காக ரயில் சேவைகளை அதிகரிக்கவும், செலவுககைள கட்டுப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பாடுபடும் என்று இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது.
ஐஆர்சிடிசி புதிய விதிகள்
இந்தியாவில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் 85 சதவீதம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் அட்டை இணைப்பை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது அமலில் உள்ளது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 29-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், ஜனவரி 5-ம் தேதிக்கு பின்னர் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 2026 ஜனவரி 12-ம் தேதிக்குப் பிறகு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக உண்மையான பயனாளர்களுக்கு, ரயில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, ஐஆர்சிடிசி ஐடி உடன் ஆதாரை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்குப் பொருந்தாது என, ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








