மக்களின் போன்களை வேவு பார்க்கும் மத்திய அரசு? CEIR திட்டம் வரமா.? சாபமா.?
நாட்டில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட உள்ள புதிய திட்டம் மூலம், மத்திய அரசு அனைத்து மொபைல் போன்களையும் டிராக் செய்யும் அதிகாரத்தை பெற வாய்ப்புள்ளது. இந்த சிஇஐஆர் (CEIR) திட்டம் மக்களுக்கு, வரமா? சாபமா? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
மத்திய அரசு வரும் மே 17ஆம் தேதி புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் தொலைந்தபோன அல்லது திருடப்பட்ட செல்போன்களை எளிதாக டிராக் செய்து கண்டுபிடிக்க முடியும். அதேபோல தொலைந்துபோன செல்போனை பிளாக்கிங் (Blocking) செய்து அந்த போனை பயன்படுத்த முடியாதவாறு செய்துவிட முடியும். அதற்காக, மத்திய அரசுக்கு ஸ்மார்ட்போனின் IMEI (சர்வதேச மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) நம்பர் தேவைப்படும்.

இந்த நம்பர் மூலம் ஒருவரது செல்போன் தொலைந்துபோகவில்லை என்றாலும், அவரது இருப்பிடத்தை டிராக்கிங் செய்து கண்டுபிடிக்க முடியும். அதோடு அவர் எங்கு செல்கிறார். முன்பு எங்கு சென்றிருந்தார் உள்ளிட்ட தகவல்களையும் பெற முடியும். இந்த திட்டம் மூலம் தொலைந்துபோன செல்போன்களை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும், மறுபுறம் மக்களின் தனியுரிமை கொள்கையை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில், CEIR திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
CEIR திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?: மே 17ஆம் தேதிக்கு பின் ஒருவரது ஸ்மார்ட்போன் எதிர்பாராதவிதமாக தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ
நீங்கள் CEIR (மத்திய உபகரண அடையாள பதிவு - Central Equipment Identity Register) என்ற வெப்சைட் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது கூகுள் பிளே (Google Play) மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் (Apple Store) கிடைக்கும் சிஇஐஆர் கேஒய்எம் ஆப் (CEIR KYM App) வாயிலாகவும் புகார் செய்யலாம்.
இந்த புகாரை அளிக்க உங்களுக்கு செல்போன் தொலைந்த உடன் போலீசாரிடம் அளித்த எஃப்ஐஆர் காப்பி தேவைப்படும். அதன் பிடிஎஃப் காப்பியை வைத்துக்கொண்டு, அதோடு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளில் நம்பர்கள் (Mobile Numbers), ஐஎம்இஐ நம்பர்கள் (IMEI Number), அந்த போனின் பிராண்ட் (Brand), மாடல் (Model), பர்ச்சேஸ் இன்வாய்ஸ் (Purchase Invoice), போன் தொலைந்துபோன இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்களை பதிவேற்ற வேண்டும்.
இந்த தகவல்களை வைத்து மத்திய அரசு அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது ஸ்மார்ட்போனை முடக்கிவடும். அதன்பின் யாராலும் அந்த போனை பயன்படுத்த முடியாது. அதைத்தொடர்ந்து போன் டிராக்கிங் செய்யப்பட்டு எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து போலீசார் மூலம் மீட்கப்படும். இறுதியாக உங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஒப்படைக்கப்படும். இதுவே CEIR திட்டத்தின் சாராம்சம்.
இந்த திட்டம் நல்லதாக தோன்றினாலும், இதை காரணம்காட்டி அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடமும், ஐஎம்இஐ நம்பர்களை மத்திய அரசு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை ஸ்மார்ட்போன் நிறுவனங்களாலும் தராமல் மறுக்க முடியாது. அப்படி, நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட போன்களின் ஐஎம்இஐ நம்பர்கள் அரசிடம் கிடைக்கும்பட்சத்தில், யாருடைய இருப்பிடத்தையும் லைவ்வாக அரசால் கண்டுபிடித்துவிட முடியும். இதனால் தனியுரிமை பாதிக்கப்படலாம். இதுகுறித்து விரைவில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








