UPI-க்கு வந்த இடி.. இனி ரூ.3,000-க்கு மேல சார்ஜ்? GPay, PhonePe, Paytm-க்கு வருதா? பணம் அனுப்ப கட்டணம்?
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற எந்தவொரு யுபிஐ (UPI) ஆப்கள் மூலமும் பரிவர்த்தனைகளை செய்தாலும், இனிமேல் அதற்கு கட்டணம் இருக்க போவதாக தெரிகிறது. ரூ.3,000-க்கு மேல் பணம் அனுப்பும் போது, வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate) பிடித்தம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதற்கான எம்டிஆர் பாலிசியை (MDR Policy) திருத்தம் செய்வதற்காக பிரதமர் அலுவலகம், பொருளாதார விவகாரத் துறை மற்றும் நிதிச் சேவைகள் துறையை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
என்டிடிவி ப்ராஃபிட் (NDTV Profit) கூற்றுப்படி, யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலம் ரூ.3,000-க்கு மேல் பணம் அனுப்பினால், எம்டிஆர் சார்ஜ் (MDR Charge) விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக வணிக தள்ளுபடி விகித பாலிசியை திருத்த மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்குகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் (Payment Service Providers) ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு செலவுகளை நிர்வகிக்க ஏதுவாக இந்த எம்டிஆர் சார்ஜ் கொண்டுவரப்பட இருப்பதாகவும் என்டிடிவி ப்ராஃபிட் தெரிவித்துள்ளது.
இதுபோக மலிவான யுபிஐ பரிவர்த்தனைகள் வழக்கம்போல கட்டணம் இல்லாமல் கிடைக்கும் என்றும் பெரிய தொகை கொண்ட பரிவர்த்தனைக்கு எம்டிஆர் சார்ஜ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களுக்காக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட ஜீரோ-எம்டிஆர் பாலிசி (Zero-MDR Policy) ஆனது திருத்தம் செய்யப்பட இருக்கிறது.
ஆகவே, எவ்வளவு கட்டணம் விதிக்கலாம், எப்போது அமலுக்கு கொண்டுவரலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆனது கடந்த வாரமே பிரதமர் அலுவலகம், பொருளாதார விவகாரத் துறை மற்றும் நிதிச் சேவைகள் துறை ஆகியவற்றை உள்ளடக்கி நடந்து முடிந்துள்ளது. 0.3 சதவீத எம்டிஆர் சார்ஜ் விதிக்கலாம் என்று இந்திய கொடுப்பனவு கழகம் (Payments Council of India) பரிந்துரைத்துள்ளது.
இது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியது. ஏற்கனவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பேமெண்ட்களுக்கு இருக்கும் எம்டிஆர் சார்ஜ்ஜை ஒப்பிடுகையில் இது குறைவாகவே இருக்கிறது. ஏனென்றால், கிரெடிட் மற்றும் டெபிட் பரிவர்த்தனைகளுக்கு முறையே 0.9 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையில் சார்ஜ் இருக்கிறது. இது கார்டுகளுக்கு பொறுத்து மாறக்கூடியது.
இதேபோல யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வர இருக்கிறது. இந்த எம்டிஆர் சார்ஜ் குறித்து பேங்குகள், ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இது ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அறிவிப்பாக வெளியாக இருக்கிறது.
மேற்கண்ட விவரங்களையே என்டிடிவி ப்ராஃபிட் ஆனது உறுதி செய்துள்ளது. உண்மையில், எம்டிஆர் சார்ஜ் கொண்டுவரப்பட இருப்பதாக பல மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால், ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் சார்ஜ் வசூலிக்கப்படவில்லை என்பதால், அதற்கு ஜிஎஸ்டி கட்டணம் பொருந்தாது என்று தெரிவித்தது. இப்போது, எம்டிஆர் சார்ஜ் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், இந்திய கொடுப்பனவு கழகம் ஆனது, யுபிஐ பரிவர்த்தனைக்கு எம்டிஆர் சார்ஜ் விதிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது இப்போது கவனிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








